வைரவன்பட்டி பைரவர் கோவிலில் பைரவாஷ்டமி விழா
மூல பாலகால பைவருக்கு பல்வேறு திரவியங்கள் மற்றும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.;
தேய்பிறை அஷ்டமி விழாவில் நடைபெற்ற யாக வேள்வி.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா திருக்கோஷ்டியூர் அருகேயுள்ள வைரவன்பட்டியில் உள்ள மூல பாலகால பைரவர் திருக்கோவிலில் பைரவாஷ்டமி விழா நடைபெற்றது.
மூல பாலகால பைரவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாலை 4.45 மணியளவில் மகா கணபதி பூஜை செய்து தீபாராதனைகளுடன் பைரவாஷ்டமி விழா தொடங்கியது. தொடர்ந்து கோ பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து லட்சார்ச்சனை நடைபெற்றது. இரவு 9.30 மணியளவில் வஸ்திர யாகம், புஷ்பயாகம், மற்றும் மகா பூர்ணாஹுதி நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்களை கோவில் சுற்றுப்பிரகாரம் வழியாக சிவாச்சாரியர்கள் தலையில் சுமந்து வர, சிவாச்சாரியார்கள் மலர் தூவி வரவேற்றனர். பின்பு மூல பாலகால பைவருக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, பன்னீர், இளநீர் மற்றும் யாக வேள்விகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீராலும் அபிஷேகம் நடைபெற்றது.
இவ்விழா ஏற்பாடுகளை ராணி மதுராந்தக நாச்சியார் தலைமையி்ல் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஶ்ரீமஹா ஸ்வாமிநீ பீடம் பாண்டிராஜன் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. அதேபோல் பிள்ளையார்பட்டி அருகேயுள்ள நகர வைரவன்பட்டியில் அமைந்திருக்கும் சிதம்பர விநாயகர் ஆலயத்தில் உள்ள பைரவர் சன்னதியில் யாக வேள்வி மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அன்னதானம் வழங்கபட்டது. திருப்பத்தூர் யோக பைரவர் சன்னதியிலும் அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.