நிம்மதி தரும் நெமிலி ஸ்ரீ பாலா
ஸ்ரீபாலா திரிபுரசுந்தரியை குழந்தை உருவமாக நிறைய இடங்களில் பார்த்திருப்போம். ஆனால்அந்த அன்னை சுண்டுவிரல் உருவத்துடன் இருக்க,அவளே தேர்ந்தெடுத்த இடம் நெமிலியில் உள்ள ஒருவீடு.;
180 வருடத்திற்கு முன்பு ஒருநாள் நள்ளிரவு நேரத்தில் சுப்பிரமணியன் என்பவரது கனவில்'உன்னிலே நிறைந்து, உன் ஊனிலே கரைந்து,உன்னுள்ளே கலந்த அன்னை ராஜராஜேஸ்வரியின் அன்பு கட்டளைக்கு இணங்கி ஆற்றிலே வருகிறேன்,என்னை அழைத்துச் செல். உன் வீட்டிலே அமர்த்திக்கொள்' எனச் சொல்லி மறைந்தாள்.இதை கேட்ட சுப்பிரமணியன் கொட்டும் மழையில் இரவில் வீட்டுக்கு அருகில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் போய் தேடினார். வெள்ளம் அவரை அடுத்தகரை வரை இழுத்துச்சென்றது.
ஆனாலும் அவர் சற்றும் மனம் தளராமல் நீரில் மூழ்கி தேடினார்.அப்போது சுண்டுவிரல் அளவில் தன்னை மாற்றி அவர்கையில் வந்து அன்னை ஸ்ரீபாலா அமர்ந்தாள். அந்த விக்கிரகத்தை வீட்டிற்கு எடுத்து வந்து அலங்காரம்செய்து பூஜிக்கலானார். அந்த வீடு, அவள் விளையாடும் மைதானம் ஆயிற்று, தூங்கும்அறையாயிற்று. குடியிருக்கும் கோவில் ஆயிற்று.லீலைகள் பல செய்து அனைவரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தாள். வீடு.. பீடமானது, கோவிலானது. பாலா தனக்காக தேர்ந்தெடுத்த வீடுதான் 'நெமிலி ஸ்ரீ பாலாபீடம்.' 'என்னை பார்க்க நினைப்பவர்கள் கோவிலுக்கு செல்வார்கள், நான் பார்க்க நினைப்பவர்கள் என்னைத் தேடி நெமிலி வருவார்கள்'என்பது அன்னை பாலாவின்அருள்வாக்கு.
அன்னை லலிதாம்பிகையின் மகள் இந்த ஸ்ரீ பாலா. இவள் 9 வயது இருக்கும் பொழுது லலிதாம்பிகை, பண்டன் என்ற அரக்கனோடு போரிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவனோ தன் 30 மைந்தர்களை ஏவிவிட்டான்.அவர்களை அழிக்க குழந்தை பாலா, அம்மாவிடம் அனுமதி கேட்டாள். முதலில் மறுத்த
லலிதாம்பிகை, பின்னர் தன் மகளுக்காக ஒரு பிரத்யேக கவசம் ஒன்றை உருவாக்கி மகளிடம் வழங்கினார். அதன் மூலம் சிறுவயதிலேயே 30 அரக்கர்களை துவம்சம் செய்து அன்னையை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினாள். ஆனாலும் அவள் குழந்தை ஆதலால் ஆயுதங்கள் தரிக்காமல் சரஸ்வதி போல ஞானமூர்த்தியாக, மாலை, புத்தகம் ஏந்தி ஞானஸ்வரூபணியாக கர்ணி ரதம் என்ற ரதத்தில் காட்சி தருகிறாள்.
நெமிலி ஸ்ரீ பாலாவை பற்றியும் பாலா பீடத்தை பற்றியும் கருவூர் சித்தர் அவர்கள் 'வீதியந்த ஆறு தெரு,தெரு அமர்ந்த வீதி விளையாடி நின்ற திரு மாளிகண்டாய் பாதி மதி ஆடியே இருந்த சாமி பத்து வயதாகும் இந்த வாமி தானே' என்று ஆற்றினை,அடுத்த வீதியில் அமர்ந்திருக்கும் அந்த வீட்டில் நடுக்கூடத்தில் அமர்ந்து உள்ளதை 800 ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர் எழுதி வைத்துள்ளார்.ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி,காஞ்சிபுரத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில்உள்ளது. இந்த பாலா ஒரு வீட்டின் நடுக்கூடத்தில்அலங்கார பூஷணியாக குழந்தைக்கு உரிய அத்தனை குணாதிசயங்களோடு வீற்றிருக்கிறாள். சுண்டு விரல் அளவில் உள்ள விக்கிரகத்திற்கு அழகாக சிறு உடைஅணிவித்து, தோடு, மாலைகள், கொலுசு என அணிவித்து மகிழ்கிறார்கள்.
அது தவிர ஒன்பது வயதுகுழந்தையாக வீற்றிருக்கும் சிறு விக்கிரகமும் அதற்கு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெறுகிறது.நைவேத்தியமாக இனிப்பு பண்டங்கள், சாக்லெட் முதலியவை வழங்கப்படுகிறது. எப்படி திருப்பதியில் லட்டு பெற்று நாம் பலருக்கும் பகிர்வோமோ, அதைப்போல நாம் படைக்கும் இனிப்புகளை, சாக்லெட்டுகளை ஸ்ரீபாலாவுக்கு அர்ப்பணித்து, அதில் ஒரு பகுதியை பிரசாதமாக தருகிறார்கள். அதை முக்கியமாக குழந்தைகளுக்கு தருமாறு கூறுகிறார்கள்.இந்த பாலா பீடத்திற்கு காஞ்சி மகா பெரியவர் வந்திருந்து 3 நாட்கள் முழு நேர பூஜை செய்து வழிபட்டதாக ஆவணங்கள் உள்ளன. குழந்தை என்பதால் முழு ஆற்றலோடு அதே நேரம் குழந்தைக்கு
உரித்தான வெள்ளந்தி மனதோடு தன்னை நாடி வருபவர்களுடன் ஓடிவந்து தங்கும் குணமுடையவள் ஸ்ரீ பாலா. இவளுக்குஆண், பெண், மதம், ஜாதி என்ற எந்த பேதமும் கிடையாது. ஆசையோடு பார்ப்பவர்களின் துயர்களை பரிதி பட்ட பனிபோல் போக்குபவள். முக்கியமாக என்னுடைய இந்த பிரச்சினையை தீர்த்தால் உனக்கு இதை செய்கிறேன், இப்படி செய்கிறேன்என்ற வாக்குறுதியை கேட்டால் கோபப்படுவாள். நான்உன்னிடம் வந்து விட்டேன் என்னுடன் இரு என்று மனதார வேண்டுபவர்களுக்கு, அவர்கள் இல்லத்திற்கே சென்ற நன்மை தருபவள், இந்த பாலா.
- காயத்ரி, சென்னை