பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முதலிடத்தில் நீடிப்பு

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 5-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

Update: 2017-12-19 00:00 GMT
துபாய்,

இலங்கைக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதன் முடிவில் வெளியிடப்பட்டுள்ள பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி (876 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். சமீபத்தில் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்த விராட்கோலி இந்த போட்டி தொடரில் விளையாடாவிட்டாலும் முதலிடத்தில் தொடருகிறார். தென்ஆப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ் (872 புள்ளிகள்) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (865 புள்ளிகள்) 3-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர் அஜாம் (846 புள்ளிகள்) 4-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கின்றனர்.

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 3-வது இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த இந்திய அணி வீரர் ரோகித் சர்மா (816 புள்ளிகள்) 2 இடங்கள் முன்னேற்றம் கண்டு 5-வது இடத்தை பிடித்துள்ளார். 2016-ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் ரோகித் சர்மா தரவரிசையில் 3-வது இடத்தை பிடித்தது அவரது சிறந்த தரநிலையாகும். ஒருநாள் போட்டியில் 800 தரவரிசை புள்ளியை ரோகித்சர்மா கடந்து இருப்பது இதுவே முதல்முறையாகும்.

தென்ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் (808 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 6-வது இடத்தையும், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் ஒரு இடம் சறுக்கி 7-வது இடத்தையும் (802 புள்ளிகள்) பெற்றுள்ளனர். தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள் டுபிளிஸ்சிஸ் (773 புள்ளிகள்), ஹசிம் அம்லா (766 புள்ளிகள்), நியூசிலாந்தின் கனே வில்லியம்சன் (760 புள்ளிகள்) முறையே 8 முதல் 10 இடங்களில் நீடிக்கின்றனர்.

இலங்கைக்கு எதிரான போட்டி தொடரில் தொடர் நாயகன் விருது பெற்ற இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஒரு இடம் ஏற்றம் கண்டு 14-வது இடம் பெற்றுள்ளார். இலங்கை வீரர்கள் மேத்யூஸ் 3 இடம் முன்னேறி 24-வது இடத்தையும், உபுல் தரங்கா 15 இடம் ஏற்றம் கண்டு 36-வது இடத்தையும், டிக்வெல்லா 7 இடம் முன்னேறி 37-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி (759 புள்ளிகள்), தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் (743 புள்ளிகள்), இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா (729 புள்ளிகள்), ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் (714 புள்ளிகள்), தென் ஆப்பிரிக்காவின் ரபடா (708 புள்ளிகள்) ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் (684 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட் (671 புள்ளிகள்) ஆகியோர் முறையே 1 முதல் 7 இடங்களில் தொடருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் (649 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தையும், வெஸ்ட்இண்டீஸ் வீரர் சுனில் நரின் (646 புள்ளிகள்), இங்கிலாந்து வீரர் பிளங்கெட் (646 புள்ளிகள்) ஆகியோர் ஒரு இடம் உயர்ந்து இணைந்து 9-வது இடத்தை பிடித்துள்ளனர். இந்திய வீரர்கள் யுஸ்வேந்திர சாஹல் 23 இடங்கள் முன்னேற்றம் கண்டு 28-வது இடத்தையும், ஹர்திக் பாண்டியா 10 இடங்கள் ஏற்றம் கண்டு 45-வது இடத்தையும், குல்தீப் யாதவ் 16 இடங்கள் முன்னேறி 56-வது இடத்தையும் பெற்றுள்ளனர். இலங்கை வீரர்கள் லக்மல் 14 இடங்கள் முன்னேறி 22-வது இடத்தையும், மேத்யூஸ் 9 இடங் கள் ஏற்றம் கண்டு 45-வது இடத்தையும் பிடித்தனர்.

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் (352 புள்ளிகள்), வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் (346 புள்ளிகள்) முறையே முதல் 2 இடங்களில் தொடருகின்றனர். இலங்கை வீரர் மேத்யூஸ் (321 புள்ளிகள்) 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தையும் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி (316 புள்ளிகள்) ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் (293 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தை பெற்றுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் தென்ஆப்பிரிக்க அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி, இலங்கைக்கு எதிரான தொடரை 3-0 என்று கைப்பற்றினால் முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றதால் 2-வது இடத்திலேயே நீடிக்கிறது. அணிகளின் புதிய தரவரிசை பட்டியல் வருமாறு:-

1. தென்ஆப்பிரிக்கா

(121 புள்ளிகள்)

2. இந்தியா (119)

3. ஆஸ்திரேலியா (114)

4. இங்கிலாந்து (114)

5. நியூசிலாந்து (111)

6. பாகிஸ்தான் (99)

7. வங்காளதேசம் (92)

8. இலங்கை (84)

9. வெஸ்ட்இண்டீஸ் (77)

10. ஆப்கானிஸ்தான் (54)

11. ஜிம்பாப்வே (52)

12. அயர்லாந்து (41)

மேலும் செய்திகள்