20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழந்தார், கோலி

20 ஓவர் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Update: 2017-12-25 22:30 GMT
துபாய்,

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடரை இந்திய அணி கைப்பற்றிய பிறகு 20 ஓவர் போட்டி அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இலங்கை தொடருக்கு முன்பாக 119 புள்ளிகளுடன் 4-வது இடம் வகித்த இந்திய அணி வெற்றியின் மூலம் 121 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

20 ஓவர் பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி ‘நம்பர் ஒன்’ இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு சரிந்துள்ளார். திருமணம் காரணமாக விராட் கோலி, இலங்கைக்கு எதிரான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடவில்லை. ஒவ்வொரு ஆட்டத்தையும் தவற விடும் போது சம்பந்தப்பட்ட வீரரின் ஒட்டுமொத்த தரவரிசை புள்ளி எண்ணிக்கையில் இருந்து 2 சதவீதம் குறைந்து விடும். அந்த வகையில் விராட் கோலியின் புள்ளி எண்ணிக்கை 824-ல் இருந்து 776 ஆக குறைந்துள்ளது. கோலியின் சரிவால் 2-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் (784 புள்ளி) முதலிடத்திற்கு உயர்ந்துள்ளார். வெஸ்ட் இண்டீசின் எவின் லீவிஸ் (780 புள்ளி) 2-வது இடத்தை பிடித்து இருக்கிறார்.

இலங்கை தொடரில் 2 அரைசதம் உள்பட 154 ரன்கள் சேர்த்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் கிடுகிடுவென 23 இடங்கள் எகிறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். 35 பந்துகளில் சதம் விளாசி உலக சாதனையை சமன் செய்த மற்றொரு இந்திய வீரர் ரோகித் சர்மா 6 இடங்கள் ஏற்றம் கண்டு 14-வது இடத்துக்கு வந்துள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் சறுக்கியுள்ளார். இலங்கை உடனான முதல் இரு ஆட்டங்களில் விக்கெட் எதுவும் எடுக்காத பும்ராவுக்கு (702 புள்ளி) 3-வது ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதனால் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இதன் விளைவாக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் (718 புள்ளி) மறுபடியும் முதலிட அரியணையில் அமர்ந்துள்ளார்.

இந்த தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை பேட்ஸ்மேன்களை மிரள வைத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 14 இடங்கள் அதிகரித்து, 16-வது இடத்தை பெற்றிருக்கிறார்.

மேலும் செய்திகள்