உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் மகனுடன் ஒரே அணியில் விளையாடும் சந்தர்பால்

சந்தர்பால் அவரது மகன் டேக்நரைனும் ஒரே அணிக்காக கைகோர்த்துள்ளனர்.

Update: 2018-02-23 22:15 GMT
கயானா,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிவ்நரைன் சந்தர்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இப்போது அவரும், அவரது மகன் டேக்நரைனும் ஆச்சரியம்படும் வகையில் ஒரே அணிக்காக கைகோர்த்துள்ளனர். நேற்று முன்தினம் கூலிட்ஜில் நடந்த வின்ட்வார்டு ஐஸ்லாண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 287 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கயானா 44.2 ஓவர்களில் 231 ரன்களில் ஆல்-அவுட் ஆகி தோற்றது. கயானா அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய டேக்நரைன் 12 ரன்னில் (12 பந்து) ரன்-அவுட் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு ஆடிய சந்தர்பால் 34 ரன்களில் (38 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் (164 போட்டி) விளையாடியவரான சந்தர்பால் மகனுடன் இணைந்து ஆடும் அனுபவம் குறித்து கூறுகையில், ‘இளம் வீரரான டேக்நரைன் முடிந்தவரை சீக்கிரம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். வாய்ப்பு கிடைக்கும் போது சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரே அணிக்காக ஆடுவதால் எங்களுக்குள் எந்த தர்மசங்கடமும் இல்லை. கலகலப்பாக பேசி ஜாலியாகவே இருக்கிறோம்.’ என்றார்.

டேக்நரைன் கூறுகையில், ‘நான் எனக்குரிய பாணியில் விளையாட முயற்சிக்கிறேன். பயிற்சியின் போது தந்தையிடம் சில ஆலோசனைகளை பெறுகிறேன்’ என்றார்.

மேலும் செய்திகள்