கிரிக்கெட்
மனன்வோராவின் ஆட்டம் திருப்புமுனையாக அமைந்தது - விராட்கோலி பாராட்டு

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மனன்வோராவின் பேட்டிங் திருப்பு முனையாக அமைந்தது என்று பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி பாராட்டினார்.
பெங்களூரு,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பதிலடி கொடுத்தது.

முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மனன்வோரா 45 ரன்னும், பிரன்டன் மெக்கல்லம் 37 ரன்னும், கேப்டன் விராட்கோலி 32 ரன்னும் எடுத்தனர். மும்பை அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், மயங்க் மார்கண்டே, ஜஸ்பிரித் பும்ரா, மெக்லெனஹான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 50 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பெங்களூரு அணி தரப்பில் டிம் சவுதி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள். பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘இந்த வெற்றி எங்களுக்கு தேவையானதாக இருந்தது. போட்டியின் முக்கியமான கட்டத்தில் கிடைத்த இந்த வெற்றி சிறப்பானது. பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வீரர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம். அதனை அவர்கள் ஆட்டத்தில் சரியாக செயல்படுத்தினார்கள். உமேஷ் யாதவ், முகமது சிராஜ், டிம் சவுதி உள்பட எல்லா பவுலர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள். கிரான்ட்ஹோம் கடைசி ஓவரில் சிறப்பாக அடித்து ஆடினார். டுமினி வீசிய ஒரு ஓவரில் மனன்வோரா 22 ரன்கள் குவித்தது ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இந்த செயல்பாடு எங்களுக்கு தேவையான ஒன்றாகும். எனது மனைவி அனுஷ்கா சர்மாவின் பிறந்த நாளில் கிடைத்த இந்த வெற்றியால் ஆட்டத்தை நேரில் பார்த்த அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். இது அவருக்கு ஒரு சிறிய பிறந்த நாள் பரிசாகும். இந்த வெற்றி நம்பிக்கையை முன்னெடுத்து செல்ல முயற்சிப்போம்’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவிக்கையில், ‘இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. இந்த தோல்விக்கு எங்களை தான் குறை சொல்ல வேண்டும். நாங்கள் நன்றாக விளையாடவில்லை. பவர்பிளேயில் விக்கெட் இழப்பது அணிக்கு உதவிகரமாக இருக்காது. அது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. நாங்கள் ஸ்கோரை அதிகமாக எடுக்க வேண்டியது அவசியமானதாகும். பெங்களூரு அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. நாங்கள் சில சிறிய தவறுகளை இழைத்து விட்டோம். அது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இன்னும் எங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. இனி வரும் எல்லா ஆட்டங்களிலும் நாங்கள் வெற்றி பெற்றாக வேண்டும். அடிப்படை ஆட்டத்தில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற எங்களுக்கு இன்னும் நல்ல வாய்ப்பு இருப்பதாக நம்புகிறேன்’ என்றார்.