கிரிக்கெட்
டெல்லி அணியை விரட்டியடித்தது ஐதராபாத்: ‘ஷிகர் தவான் ஆட்டம் அபாரமாக இருந்தது’ கேப்டன் வில்லியம்சன் பாராட்டு

‘டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஷிகர் தவானின் ஆட்டம் அபாரமாக இருந்தது’ என்று ஐதராபாத் அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் பாராட்டினார்.
புதுடெல்லி, ‘டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஷிகர் தவானின் ஆட்டம் அபாரமாக இருந்தது’ என்று ஐதராபாத் அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் பாராட்டினார்.ஐதராபாத் அசத்தல் வெற்றி ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (பிளே–ஆப்) முன்னேறியது. தோல்வி கண்ட டெல்லி அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. ரிஷாப் பான்ட் 63 பந்துகளில் 15 பவுண்டரி, 7 சிக்சருடன் 128 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை ரிஷாப் பான்ட் பெற்றார்.ஷிகர் தவானுக்கு பாராட்டு பின்னர் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹாலெஸ் 14 ரன்னில் ஆட்டம் இழந்தார். 2–வது விக்கெட்டுக்கு கேப்டன் கனே வில்லியம்சன், ஷிகர் தவானுடன் இணைந்தார். இந்த ஜோடி கடைசி வரை நிலைத்து நின்று அபாரமாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்து வெற்றியை தனதாக்கியது. ஷிகர் தவான் 92 ரன்னும் (50 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன்), கனே வில்லியம்சன் 83 ரன்னும் (53 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஐதராபாத் அணியின் அதிகபட்ச சேசிங்கும் இதுவாகும். இந்த சீசனில் ஐதராபாத் அணி தொடர்ச்சியாக பெற்ற 6–வது வெற்றி இதுவாகும். ஐதராபாத் அணி வீரர் ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பிறகு ஐதராபாத் அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் அளித்த பேட்டியில், ‘இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் எங்களது திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினோம். எதிரணியை போதுமான ஸ்கோருக்குள் கட்டுப்படுத்தினோம். இங்கு சேசிங் செய்வது எப்பொழுதும் கடினமானதாகும். முதல் பாதியில் ஆடுகளம் கடினமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனாலும் ரிஷாப் பான்ட் சிறப்பாக ஆடினார். பின்பாதியில் ஆடுகளத்தின் தன்மை சற்று சிறப்பாக அமைந்தது. பனியின் தாக்கமும் லேசாக இருந்தது. பின்னர் பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் நன்றாக இருந்தது. இந்த ஆட்டத்தில் இருந்து நாங்கள் உத்வேகம் பெற்று இருப்பது நல்ல வி‌ஷயமாகும். நல்ல பார்ட்னர்ஷிப் ஆட்டம் அமைந்தது அருமையானதாகும். ஷிகர் தவான் ஆட்டம் அபாரமாக இருந்தது. முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடுவதில் அவர் ஆர்வம் காட்டினார். இது ஒரு அற்புதமான ஆட்டம்’ என்று தெரிவித்தார்.பந்து வீச்சு சரியில்லை தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த ஆடுகளத்தில் நாங்கள் எடுத்த ஸ்கோர் சிறப்பானதாகும். பவர்பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு பாதகமாக அமைந்தது. இருப்பினும் ரிஷாப் பான்ட் ஆடிய விதம் பாராட்டப்படத்தக்கது. கடைசி கட்டத்தில் ஆடுகளம் சிறப்பாக இருந்தது. எதிரணியினரை வீழ்த்தும் வகையில் எங்கள் பந்து வீச்சு நன்றாக அமையவில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற தகுதி படைத்தவர்கள் இல்லை. அடுத்த சுற்று வாய்ப்பை நாங்கள் இழந்து விட்டாலும் எஞ்சிய ஆட்டங்கள் எங்களது இளம் வீரர்களுக்கு முக்கியமானது. அது அடுத்த ஆண்டுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும்’ என்றார்.