கிரிக்கெட்
முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கையை பந்தாடியது தென்ஆப்பிரிக்கா

தம்புல்லாவில் நடந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி, இலங்கையை பந்தாடியது.
தம்புல்லா,

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்த தென்ஆப்பிரிக்க அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி, எதிரணியின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. தரங்கா (10 ரன்), கேப்டன் மேத்யூஸ் (5 ரன்) உள்பட 5 வீரர்கள் 36 ரன்களை எட்டுவதற்குள் வெளியேறினர். இதன் பின்னர் குசல் பெரேராவும், திசரா பெரேராவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 6-வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியின் போராட்டத்திற்கு சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி முடிவு கட்டினார். அதன் பிறகு இலங்கை அணி மீண்டும் தடம் புரண்டது. அந்த அணி 34.3 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. குசல் பெரேரா 81 ரன்களும் (72 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்), திசரா பெரேரா 49 ரன்களும் (30 பந்து, 8 பவுண்டரி) எடுத்தனர். தென்ஆப்பிரிக்க தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ரபடா, சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 31 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டுமினி ஆட்டம் இழக்காமல் 53 ரன்களும் (32 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் பிளிஸ்சிஸ், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் தலா 47 ரன்களும் எடுத்தனர்.

கேப்டனாக தனது 100-வது ஆட்டத்தில் ஆடிய இலங்கை கேப்டன் மேத்யூஸ் கூறுகையில், ‘இது எங்களுக்குரிய நாளாக அமையவில்லை. 34.3 ஓவர்களிலேயே ஆல்-அவுட் ஆனது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. 50 ஓவர்களும் விளையாடி இருந்தால் 230 முதல் 240 ரன்கள் வரை எடுத்திருப்போம். புதிய பந்தில் நாங்கள் சிறப்பாக பேட் செய்ய வேண்டியது அவசியமாகும்’ என்றார்.

தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ் கூறுகையில், ‘காற்றின் தாக்கம் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் இதற்கு முன்பு இத்தகைய சூழலில் விளையாடிய அனுபவம் இருந்ததால் சமாளித்து விட்டோம். எங்களது பேட்ஸ்மேன்கள் எல்லோரும் சுழற்பந்து வீச்சில் தைரியமாக சில ஷாட்டுகளை அடித்து நெருக்கடி கொடுக்க முயற்சித்தோம். இப்பணியை டுமினி நிறைவாக செய்து முடித்தார்’ என்றார்.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் 1-ந்தேதி நடக்கிறது.