மதுரை அணி 4-வது வெற்றி அருண்கார்த்திக், தலைவன் சற்குணம் அரைசதம் விளாசினர்

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நெல்லையில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மதுரை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சை பதம்பார்த்து தனது 4-வது வெற்றியை பதிவு செய்தது. அருண் கார்த்திக், தலைவன் சற்குணம் அரைசதம் விளாசினர்.

Update: 2018-07-29 22:50 GMT
நெல்லை,

8 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது.

இதில் நெல்லையில் நேற்று மாலை நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்சும், திருச்சி வாரியர்சும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த மதுரை கேப்டன் ரோகித் முதலில் திருச்சியை பேட் செய்ய பணித்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுரேஷ்குமார் 42 ரன்களும் (26 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), வசந்த் சரவணன் 52 ரன்களும் (28 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். மிடில் வரிசையில் அந்த அணியின் ரன்வேகத்தை சுழற்பந்து வீச்சாளர் ரஹில் ஷா 3 விக்கெட்டுகளை சாய்த்து வெகுவாக கட்டுப்படுத்தினார். இருப்பினும் வசந்த் சரவணன்-சுரேஷ்குமார் ஜோடியின் அதிரடியால் கடைசி 5 ஓவர்களில் அந்த அணி 63 ரன்கள் திரட்டி, சவாலான ஸ்கோரை எட்டியது.

அடுத்து களம் இறங்கிய மதுரை அணியில் கேப்டன் ரோகித் (11 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. அதன் பிறகு அருண் கார்த்திக்கும், தலைவன் சற்குணமும் கைகோர்த்து, திருச்சி பவுலர்களை பதம் பார்த்தனர். குறிப்பாக களத்தில் உற்சாகம் காட்டிய தலைவன் சற்குணம் சிக்சரும், பவுண்டரியுமாக விரட்டி எதிரணியின் நம்பிக்கையை சீர்குலைத்தார். சுழற்பந்து வீச்சாளர் சஞ்சயின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்டு அமர்க்களப்படுத்தினார். இவர்கள் 2-வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்து வெற்றிப்பயணத்தை சுலபமாக்கினர். தலைவன் சற்குணம் 70 ரன்கள் (36 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினார். அவருக்கு பிறகு வந்த சந்திரன் (2 ரன்), ஜே.கவுசிக் (9 ரன்), தன்வர் (1 ரன்) ஆகியோர் சீக்கிரம் நடையை கட்டினாலும், அருண் கார்த்திக் இறுதிவரை நிலைத்து நின்று விளையாடி வெற்றியை உறுதி செய்தார்.

மதுரை பாந்தர்ஸ் அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அருண் கார்த்திக் 80 ரன்களுடன் (45 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) களத்தில் இருந்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து 4-வது வெற்றியை ருசித்த மதுரை அணி இதன் மூலம் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. முதல் 2 ஆட்டங்களில் வெற்றி கண்ட திருச்சி அணி, அதன் பிறகு தொடர்ச்சியை சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.

வெற்றிக்கு பிறகு மதுரை கேப்டன் ரோகித் கூறுகையில், ‘நாங்கள் 20 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்து விட்டோம். இருப்பினும், எங்களது பேட்ஸ்மேன்கள் சூப்பராக விளையாடி வெற்றியை தேடித்தந்தனர். அதுவும் பலமாக காற்று வீசக்கூடிய சூழலில் 176 ரன்களை ‘சேசிங்’ செய்வது எளிதான விஷயம் அல்ல’ என்றார்.

திருச்சி கேப்டன் பாபா இந்திரஜித் கூறும் போது, 175 ரன்கள் என்பது ஓரளவு நல்ல ஸ்கோர் என்றே நினைத்தேன். ஆனால் அவர்களது பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடி வெற்றி வாய்ப்பை பறித்து விட்டனர். எஞ்சிய இரு லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேற எங்களுக்கு வாய்ப்புள்ளது’ என்றார்.

மேலும் செய்திகள்