கிரிக்கெட்
முகமது ‌ஷமி மீது மனைவி புதிய குற்றச்சாட்டு

முகமது ‌ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை சித்ரவதை செய்ததாக அவரது மனைவி ஹசின் ஜஹன் சில மாதங்களுக்கு முன்பு கொல்கத்தா போலீசில் புகார் அளித்தார்.
அம்ரோஹா, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 27 வயதான முகமது ‌ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை சித்ரவதை செய்ததாக அவரது மனைவி ஹசின் ஜஹன் சில மாதங்களுக்கு முன்பு கொல்கத்தா போலீசில் புகார் அளித்தார். அது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் முகமது ‌ஷமி ஒரு மோசடி பேர்வழி என்று ஹசின் ஜஹன் இப்போது புதிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். முகமது ‌ஷமியின் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு அதில் அவரது பிறந்த நாள் தேதி வெவ்வேறாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். ஆச்சரியம் அளிக்கும் வகையில் அவரது வாக்காளர் அடையாள அட்டையில் 2001–ம் ஆண்டு ஜனவரி 1–ந்தேதி நிலவரப்படி 21 வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஓட்டுனர் உரிமத்தில் பிறந்த நாள் தேதியாக 1982–ம் ஆண்டு ஜனவரி 8–ந்தேதி என்றும், மதிப்பெண் சான்றிதழில் 1984–ம் ஆண்டு ஜனவரி 3–ந்தேதி என்றும் உள்ளது. உள்நாட்டில் சில ஜூனியர் போட்டிகளில் விளையாடுவதற்காக அவர் போலியான பிறப்பு சான்றிதழை பயன்படுத்தி கிரிக்கெட் வாரியத்தை முட்டாளாக்கி இருக்கிறார் என்றும் ஹசின் ஜஹன் கூறியுள்ளார்.