கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார், விராட்கோலி

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட்கோலி, பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார்.
துபாய்,

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் 149 ரன்னும், 2-வது இன்னிங்சில் 51 ரன்னும் குவித்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறினார். இதன் மூலம் தெண்டுல்கருக்கு (2011-ம் ஆண்டு) பிறகு டெஸ்ட் போட்டியில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சிறப்பை பெற்றார். இந்த நிலையில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் விராட்கோலி (23, 17 ரன்கள்) பேட்டிங்கில் சொதப்பினார். இதனால் 15 தரவரிசை புள்ளிகள் இழந்த விராட்கோலி (919 புள்ளிகள்) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் (929 புள்ளிகள்) 2-வது இடத்தில் இருந்து முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 9 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பந்து வீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் மொத்தம் 903 புள்ளிகள் குவித்துள்ளார். இதன் மூலம் கடந்த 28 ஆண்டுகளில் 900 தரவரிசை புள்ளிகளை கடந்த முதல் இங்கிலாந்து பந்து வீச்சாளார் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றார்.