டோனி, சுரேஷ் ரெய்னா, ரோகித் அதிக சிக்சர்கள் சாதனை படைக்கப்போவது யார்?

ஐபிஎல் போட்டியில் அதிக சிக்சர்கள் சாதனையை படைக்கப்போவது யார் என்பது தெரியவரும்.

Update: 2019-03-16 06:04 GMT
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி, ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. 12 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 23 ஆம் தேதி தொடங்குகிறது. 23 ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணையதளம் மூலமாகவும், நேரடி கவுன்டர் மூலமும் இன்று காலை 11:30க்கு தொடங்குகிறது.

இந்நிலையில் நேரடி கவுன்டர்களில் டிக்கெட்களை பெற நள்ளிரவு முதலே ரசிகர்கள் அதிகளவில் குவிந்தனர். ஆயிரத்து ஐநூறு ரூபாய் முதல் ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் வரை டிக்கெட்களின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, நேற்று சென்னை வந்தார். மற்ற வீரர்களும் சென்னை வந்து சேர்ந்தனர். அவர்கள் இன்று முதல் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். ஏற்கனவே சில வீரர்கள் கடந்த சில நாட்களாக சென்னையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்களை நெருங்குவது யார் என்ற போட்டியில் எம்.எஸ். டோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் உள்ளனர்.

இதுவரை நடந்துள்ள ஐபிஎல் போட்டிகளில் டோனி 186 சிக்சர்களும், சுரேஷ் ரெய்னா 185 சிக்சர்களும், ரோகித் சர்மா 184 சிக்சர்களும் அடித்துள்ளனர்.

இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் சிக்சர்கள் அடித்து 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது.

ஐபிஎல் தொடரில் சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் 292 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்