20 ஓவர் கிரிக்கெட்டில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த மலிங்கா தரவரிசையில் முன்னேற்றம்

20 ஓவர் கிரிக்கெட்டில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த மலிங்கா தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

Update: 2019-09-08 00:15 GMT
பல்லகெலே,

பல்லகெலேவில் நேற்று முன்தினம் இரவு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இலங்கை அணி நிர்ணயித்த 126 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து 16 ஓவர்களில் 88 ரன்னில் முடங்கியது.

இந்த ஆட்டத்தில் இலங்கை கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான லசித் மலிங்கா ‘ஹாட்ரிக்’ சாதனையோடு தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அமர்க்களப்படுத்தினார். ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் மலிங்காவின் 5-வது ஹாட்ரிக் (ஒரு நாள் போட்டியில் மூன்று, 20 ஓவர் போட்டியில் இரண்டு) இதுவாகும். இதன் மூலம் சர்வதேச போட்டியில் அதிக ‘ஹாட்ரிக்’ சாதனை நிகழ்த்திய பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமுடைய சாதனையை (இவர் 4 ஹாட்ரிக் அதாவது டெஸ்டில் 2, ஒரு நாள் போட்டியில் 2) மலிங்கா முறியடித்தார்.

‘ஹாட்ரிக்’ சாதனையின் மூலம் மலிங்காவுக்கு 20 ஓவர் கிரிக்கெட்டின் தரவரிசையில் கிடுகிடு ஏற்றம் கிடைத்துள்ளது. நேற்று வெளியான பந்து வீச்சாளர்களின் புதிய தரவரிசையில் அவர் 20 இடங்கள் எகிறி 21-வது இடத்தை பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் ‘நம்பர் ஒன்’ இடத்தில் தொடருகிறார்.

மேலும் செய்திகள்