சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்காதது ஏன்? ஹர்திக் பாண்டியா விளக்கம்
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
நேப்பியர்,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. வெலிங்டனில் நடக்க இருந்த தொடக்க ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மவுன்ட் மாங்கானுவில் நடந்த 2-வது ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடிய இந்திய அணி, 3வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 161 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய போது ஆட்டத்தின் குறுக்கே மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டத்து. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் டிஎல்எஸ் முறைப்படி ஒரே ஸ்கோர் அடித்திருந்ததால் ஆட்டம் டை ஆனது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்த தொடரில் இந்தியா வெற்றி கண்ட போதும், ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றங்கள் உள்ளன. இதற்கு காரணம் சஞ்சு சாம்சன் மற்றும் உம்ரான் மாலிக் தான். எந்த ஆர்டரில் வேண்டுமானாலும் களமிறங்கி அதிரடி காட்டக்கூடிய சஞ்சுசாம்சனுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுவதே இல்லை. இதே போல இந்தியாவின் எதிர்காலமாக பார்க்கப்படும் உம்ரான் மாலிக்கிற்கும் வாய்ப்புகளே தரப்படவில்லை. இதனால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் குறித்து ஹர்திக் பாண்ட்யா விளக்கம் அளித்துள்ளார். அதில்,
வெளியில் என்ன பேசிக்கொண்டாலும், அது அணியில் எங்களை பாதிக்கவே பாதிக்காது. இது என்னுடைய அணி. பயிற்சியாளருடன் இணைந்து யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து தான் எடுக்கிறேன். ஒவ்வொருவருக்கும் நேரம் வரும் போது, அவர்களுக்கான வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும். இது ஒரு சிறிய தொடராகும். ஒருவேளை இது நிறைய போட்டிகள் கொண்ட தொடராக இருந்திருந்தால் நிச்சயம் அனைவரையும் பயன்படுத்தி பார்த்திருப்போம்.
நீங்கள் இந்திய அணியில் இருக்கிறீர்கள், ஆனால் ஆடும் லெவன் அணியில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, அது கடினம். வீரர்கள் மோசமாக உணர்ந்தால் என்னிடம் வந்து பேசலாம், அல்லது பயிற்சியாளரிடம் சென்று பேசலாம்,
நான் கேப்டனாக இருந்தால், அது ஒரு பிரச்சனையும் இல்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் எனது இயல்பு எல்லாரும் ஒன்றாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் உள்ளது,