காமன்வெல்த் விளையாட்டு - பதக்கம் வெல்லும் முனைப்பில் மேரிகோம்

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வெல்லும் முனைப்பில் மேரிகோம், கால்இறுதியில் ஸ்காட்லாந்து வீராங்கனையுடன் மோத உள்ளார்.

Update: 2018-04-04 22:30 GMT
கோல்டுகோஸ்ட்,

5 முறை உலக சாம்பியனும், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் முதல்முறையாகவும், கடைசியாகவும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் களம் காணுகிறார். 35 வயதான மேரிகோம் கோல்டுகோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் பெண்கள் குத்துச்சண்டையில் 48 கிலோ உடல் எடைப்பிரிவில் பங்கேற்கிறார். இந்த பந்தயத்தில் மொத்தம் 8 வீராங்கனைகள் மட்டுமே கலந்து கொண்டு இருப்பதால் வருகிற 8-ந் தேதி நடைபெறும் கால்இறுதி சுற்றில் மேரிகோம், ஸ்காட்லாந்து வீராங்கனை மெகன் கோர்டானை சந்திக்கிறார். இதில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினாலே மேரிகோம் பதக்கத்தை உறுதி செய்துவிடுவார். குத்துச்சண்டை போட்டியில் அரைஇறுதியில் தோல்வி கண்டாலும் வெண்கலப்பதக்கம் உண்டு.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 19 வயதான குத்துச்சண்டை வீராங்கனை தாய்லாஹ் ராபட்ர்சன் களம் காணும் முன்பே பதக்கத்தை உறுதி செய்துவிட்டார். அவர் பங்கேற்கும் 51 கிலோ உடல் எடைப்பிரிவு பந்தயத்தில் மொத்தம் 7 வீராங்கனைகள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். இதனால் அவருக்கு நேரடியாக அரைஇறுதியில் (13-ந் தேதி) களம் இறங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அரைஇறுதியில் தோற்றாலும் அவருக்கு வெண்கலப்பதக்கம் கிடைக்கும்.

மேலும் செய்திகள்