துளிகள்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இலங்கையில் நடந்த ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Update: 2018-09-18 22:15 GMT

* இலங்கையில் விளையாடி வரும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அங்கு ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கட்டுநாயகேவில் இன்று நடக்கிறது.

* இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிஸ்டல் இரவு விடுதியில் வாலிபரை தாக்கிய வழக்கில் அண்மையில் கோர்ட்டால் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் தனது நடத்தையால் கிரிக்கெட் விளையாட்டுக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக அவர் மீதும், சம்பவத்தின் போது உடன் இருந்த சக வீரர் அலெக்ஸ் ஹாலெஸ் மீதும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு டிசம்பர் 5 மற்றும் 7-ந்தேதிகளில் அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளது. அதன் பிறகே அவர்களுக்கு தடை ஏதும் விதிக்கப்படுமா? என்பது தெரிய வரும்.

* ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் திவிஜ் சரணுக்கு டெல்லியில் நடந்த பாராட்டு விழாவில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் ரூ.1 கோடியை ஊக்கத்தொகையாக வழங்கினார்.

* ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை மனதில் கொண்டு அனுபவம் வாய்ந்த டோனி, பேட்டிங்கில் 4-வது வரிசையில் விளையாட வேண்டும், இது மிகவும் முக்கியமான வரிசை’ என்று இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் கூறியுள்ளார்.

* பாலின சர்ச்சைகளில் இருந்து மீண்டு ஆசிய விளையாட்டில் இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த ஒடிசா ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்தின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக அடுத்த ஆண்டு வெளியிடப்படுகிறது.

மேலும் செய்திகள்