ஊரடங்கு பாதுகாப்பு பணியில் விளையாட்டு பிரபலங்கள்

ஊரடங்கு பாதுகாப்பு பணியில் விளையாட்டு பிரபலங்கள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2020-03-28 00:18 GMT
புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஊரடங்கை மதிக்காமல் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

மக்கள் வெளியில் வருவதை தடுக்கும் பொருட்டு எல்லா மாநிலங்களிலும் போலீசார் இரவு-பகலாக ரோந்து சுற்றி வருகிறார்கள். ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து நடைபெறும் போலீஸ் ரோந்து பணியில் இந்திய விளையாட்டு பிரபலங்களான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மா, காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் அகில்குமார், இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் அஜய் தாகூர் ஆகியோரும் ஈடுபட்டு வருகிறார்கள். 

ஜோகிந்தர் சர்மா, அகில்குமார் ஆகியோர் அரியானா மாநில போலீஸ் துறையில் அதிகாரிகளாக பணியாற்றி வருகிறார்கள். அஜய் தாகூர் இமாச்சலபிரதேச மாநிலத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார். போலீசாருக்கு தலைமை வகித்து தாங்கள் பணியாற்றும் பகுதியில் உள்ள சாலைகளில் ரோந்து சுற்றி வரும் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். 

அஜய் தாகூர் போலீசாருடன் இணைந்து தான் ரோந்து சுற்றி வந்த வீடியோ காட்சியை சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து இருப்பதுடன் அவருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்