ஆசிய தடகளம்: நீளம் தாண்டுதலில் ஸ்ரீசங்கருக்கு வெள்ளிப்பதக்கம்: ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்

ஆசிய தடகள போட்டியின் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் ஸ்ரீசங்கர் வெள்ளிப்பதக்கம் வென்றதுடன், ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

Update: 2023-07-15 20:02 GMT

பாங்காக்,

ஸ்ரீசங்கர் வெள்ளி வென்றார்

24-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது.

இதில் 4-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் ஸ்ரீசங்கர் தனது கடைசி முயற்சியில் 8.37 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பத்தம் வென்றார். அத்துடன் அவர் அடுத்த ஆண்டு (2024) பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கு 8.27 மீட்டராகும். இதில் சீன தைபே வீரர் யு தாங் லின் (8.40 மீட்டர்) தங்கப்பதக்கமும், சீனாவின் ஜாங் மிங்குன் (8.08 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

கேரளாவை சேர்ந்த 24 வயதான ஸ்ரீசங்கர் கடந்த மாதம் நடந்த தேசிய தடகள போட்டியில் 8.41 மீட்டர் தாண்டியதன் மூலம் புடாபெஸ்டில் அடுத்த மாதம் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீரர் சந்தோஷ் குமார் 49.09 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப்பதக்கத்தை பெற்றார். கத்தார் வீரர் முகமது ஹிமிடா (48.64 வினாடி) தங்கப்பதக்கமும், ஜப்பான் வீரர் யுசாகு கோடாமா (48.96 வினாடி) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர். மற்றொரு இந்திய வீரர் யாஷஸ் பாலாக்ஷா இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிறகு விலகினார்.

கலப்பு தொடர் ஓட்டத்தில் தங்கம்

உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சர்வேஷ் அனில் குஷார் (2.26 மீட்டர்) வெள்ளிப்பதக்கத்தை சொந்தமாக்கினார். தென்கொரியா வீரர் வூ சாங்யோக் 2.28 மீட்டர் தூரம் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் ராஜேஷ் ரமேஷ், ஐஸ்வர்யா மிஸ்ரா, அமோஜ் ஜேக்கப், சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 14.70 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தது. இலங்கை அணி வெள்ளிப்பதக்கமும், ஜப்பான் அணி வெண்கலப்பதக்கமும் வென்றது.

பெண்களுக்கான ஹெப்டத்லான் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா பார்மன் (5,840 புள்ளி) வெள்ளிப்பதக்கத்தை வென்றார். உஸ்பெகிஸ்தானின் எகதெரினா வோரோனினா (6,098 புள்ளி) தங்கப்பதக்கமும், ஜப்பானின் யுகி யமாசாகி (5,696 புள்ளி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

3-வது இடத்தில் இந்தியா

இன்றுடன் நிறைவு பெறும் இந்த போட்டியில் இந்தியா 6 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறது. ஜப்பான் 29 பதக்கங்களுடன் (11 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலம்) முதலிடத்திலும், சீனா 17 பதக்கங்களுடன் (6 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம்) 2-வது இடத்திலும் உள்ளன.

 

Tags:    

மேலும் செய்திகள்