உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய பளுதூக்குதல் அணி அறிவிப்பு
சீனாவில் செப்டம்பர் 23-ந் தேதி ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்குகிறது.;
புதுடெல்லி,
உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் செப்டம்பர் 4-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக போட்டியில் 2 முறை பதக்கம் கைப்பற்றியவருமான மீராபாய் சானு, காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் பிந்த்யாராணி தேவி மற்றும் 3 வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
கடந்த மே மாதம் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 6-வது இடம் பெற்ற மீராபாய் சானு அதன் பிறகு பங்கேற்கும் முதல்போட்டி இதுவாகும். வீராங்கனைகள் மீராபாய் சானு, பிந்த்யா ராணி தேவி ஆகியோர் தற்போது அமெரிக்காவில் பயிற்சி பெற்று வருகிறார்கள். இது குறித்து தேசிய பயிற்சியாளர் விஜய் சர்மா கூறுகையில், 'மீராபாய் காயம் அடையவில்லை. அவரது உடல் வலிமையை அதிகரிப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உலக மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பார். ஆசிய விளையாட்டு போட்டி அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று கிடையாது. ஆசிய விளையாட்டில் இதுவரை அவர் பதக்கம் வெல்லவில்லை. இதனால் அவர் இரு போட்டிகளிலும் கலந்து கொள்கிறார்' என்றார். உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய பளுதூக்குதல் அணி வருமாறு:-
மீராபாய் சானு (49 கிலோ), பிந்த்யாராணி தேவி (55 கிலோ), அசிந்தா ஷூலி (73 கிலோ), சுபம் தோட்கர் (61 கிலோ), நாராயண அஜித் (73 கிலோ). சுபம் தோட்கர் தவிர்த்து இந்திய அணி அப்படியே சீனாவில் செப்டம்பர் 23-ந் தேதி தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.