உலக தடகளம்: போல்வால்ட் பந்தயத்தில் சுவீடன் வீரர் புதிய சாதனை

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் போல்வால்ட் பந்தயத்தில் சுவீடன் வீரர் அர்மன்ட் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

Update: 2022-07-25 21:20 GMT

image courtesy: World Athletics twitter

யூஜின்,

18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் யூஜின் நகரில் நடந்தது. 10 நாட்கள் நடந்த இந்த போட்டியில் கடைசி நாளில் நடந்த ஆண்களுக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) பந்தயத்தின் இறுதி சுற்றில் 12 பேர் போட்டியிட்டனர்.

இதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான அர்மன்ட் டூப்ளாண்டீஸ் 6.21 மீட்டர் உயரம் தாண்டி தனது சொந்த சாதனையை தகர்த்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். உலக உள்ளரங்க போட்டியில் சாம்பியனான அவர் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

அமெரிக்க வீரர் கிறிஸ்டோபர் நில்சென் 5.94 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கமும், பிலிப்பைன்ஸ் வீரர் எர்னஸ்ட் ஜான் ஒபினா 5.94 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் கென்யா வீராங்கனை டொபி அமுசென் 12.06 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். பெண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்க அணி (3 நிமிடம் 17.79 வினாடி) தங்கப்பதக்கமும், ஜமைக்கா அணி வெள்ளிப்பதக்கமும், இங்கிலாந்து அணி வெள்ளிப்பதக்கமும் பெற்றன.

போட்டியின் முடிவில் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா 13 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என 33 பதக்கங்களுடன் மீண்டும் முதலிடத்தை சொந்தமாக்கியது. எத்தியோப்பியா 4 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கத்துடன் 2-வது இடத்தை பிடித்தது. இந்தியா, நீரஜ் சோப்ரா வென்ற ஒரே வெள்ளிப்பதக்கத்துடன் 33-வது இடத்தை 5 நாடுகளுடன் இணைந்து பெற்றது.

அடுத்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் அடுத்த ஆண்டு (2023) ஆகஸ்டு 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது.

போட்டி நிறைவு விழாவில், 19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் ஹங்கேரி தடகள சம்மேளன தலைவர் மிக்லோஸ் குலாயிடம் போட்டிக்குரிய கொடியை, உலக தடகள சம்மேளன தலைவர் செபாஸ்டியன் கோ முறைப்படி வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்