டென்னிஸ்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், ஸ்விடோலினா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ஸ்விடோலினா 3-வது சுற்றுக்கு முன்னேற்றினார்கள்.
பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச், உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-6 (7-1), 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஸ்பெயின் தகுதி சுற்று வீரர் ஜார்மி முனாரை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ராபர்டோ பாடிஸ்டிடா அகுட் 6-4, 7-5, 6-3 என்ற நேர்செட்டில் கொலம்பியா வீரர் சான்டியாகோ ஜிரால்டோவை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். மற்ற ஆட்டங்களில் பாப்லோ கார்ரினோ பஸ்டா (ஸ்பெயின்), பெர்னாண்டோ வெர்டாஸ்கோ (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தனர். முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் செக் குடியரசு வீரர் தாமஸ் பெர்டிச் 6-7 (5-7), 6-7 (8-10), 6-1, 7-5, 2-6 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் ஜெர்மி சார்டியிடம் போராடி தோல்வி கண்டார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் விக்டோரியா குஸ்மோவாவை (சுலோவக்கியா) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நோமி ஒசாகா 6-4, 7-5 என்ற நேர்செட்டில் கஜகஸ்தான் வீராங்கனை ஜரினா டையாஸ்சை சாய்த்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

இன்னொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா 6-0, 6-4 என்ற நேர்செட்டில் ஸ்பெயின் வீராங்கனை லாரா அருபாரெனாவை எளிதில் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு தகுதி கண்டார். முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 2-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனை அலிசன் ரிஸ்கியை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.