டென்னிஸ்
ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய டென்னிஸ் அணியில் லியாண்டர் பெயஸ்

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய டென்னிஸ் அணியில் லியாண்டர் பெயஸ் இடம் பெற்றுள்ளார்.
புதுடெல்லி, 

18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் உள்ள ஜகர்தா நகரில் ஆகஸ்டு 18-ந் தேதி முதல் செப்டம்பர் 2-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணியை, இந்திய டென்னிஸ் சம்மேளன தேர்வு குழுவினர் நேற்று தேர்வு செய்து அறிவித்தனர். இந்திய அணியில் 44 வயதான லியாண்டர் பெயஸ் இடம் பெற்றுள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியில் 8 பதக்கங்கள் வென்றுள்ள லியாண்டர் பெயஸ் 2006-ம் ஆண்டுக்கு பிறகு ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலக தரவரிசையில் 94-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி, ஆகஸ்டு 27-ந் தேதி தொடங்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருப்பதால் அவருக்கு இந்திய அணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆண்கள் அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டனாக ஜீசன் அலியும், பெண்கள் அணியின் பயிற்சியாளராக அங்கிதா பாம்ப்ரியும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

12 பேர் கொண்ட இந்திய டென்னிஸ் அணி வருமாறு:-

ஆண்கள் அணி: ராம்குமார் ராமநாதன், பிராஜ்னேஷ் குணேஸ்வரன், சுமித் நாகல், லியாண்டர் பெயஸ், ரோகன் போபண்ணா, திவிஜ் சரண். பெண்கள் அணி: அங்கிதா ரெய்னா, கர்மான் கவுர், ருதுஜா போஸ்லே, பிரான்ஜாலா யாட்லாபாலி, ரியா பாட்டியா, பிரார்த்தனா தோம்பரே.