டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: அரைஇறுதியில் செரீனா, ஆஸ்டாபென்கோ

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரைஇறுதிக்கு செரீனா, ஆஸ்டாபென்கோ ஆகியோர் முன்னேறினர்.
லண்டன்,

‘கிராண் ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சுலோவக்கியாவின் சிபுல்கோவாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். லாத்வியா வீராங்கனை ஒருவர் விம்பிள்டன் டென்னிசில் அரைஇறுதியை எட்டுவது இதுவே முதல் முறையாகும். 21 வயதான ஆஸ்டாபென்கோ அரைஇறுதியில் முன்னாள் நம்பர் ஒன் மங்கை ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) எதிர்கொள்கிறார். கெர்பர் தனது கால்இறுதியில் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் டாரியா கசட்கினாவை வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கமிலா ஜியார்கியை (இத்தாலி) போராடி தோற்கடித்து 11-வது முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இதே போல் ஜூலியா ஜார்ஜெஸ் (ஜெர்மனி) தன்னை எதிர்த்த கிகி பெர்டென்சை (நெதர்லாந்து) 3-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வெளியேற்றினார்.

முன்னதாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ 7-6 (7-1), 7-6 (7-5), 5-7, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஜிலெஸ் சிமோனை (பிரான்ஸ்) தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.