டென்னிஸ்
ஹால் ஆப் பேம் ஓபன் டென்னிஸ் போட்டி: ராம்குமார் ராமநாதன் அரையிறுதிக்கு தகுதி

ஹால் ஆப் பேம் ஓபன் டென்னிஸ் போட்டியில் ராம்குமார் ராமநாதன் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார். #RamkumarRamanathan #HallOfFameOpen
நியுபோர்ட்,

அமெரிக்காவின் நியுபோர்ட்டில் நடைபெற்று வரும் ஹால் ஆப் பேம் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன் (23) ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில், 7-5, 6-2 என்ற செட் கணக்கில் கனடாவின் வாஸக் பாஸ்பிசில்லை வீழ்த்தினார்.

இதன் மூலம் அவர் முதன்முறையாக ஏடிபி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். மேலும் ராம்குமார், ஏடிபி தரவரிசையில் 161வது இடத்தில் உள்ளார். அடுத்து நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டிம் சிம்மேஸக்கை அவர் எதிர்கொள்கிறார்.

இரட்டையர் காலிறுதியில் லியாண்டர் பயஸ்-அமெரிக்காவின் ஜேமி செரட்டனி ஜோடி 3-6, 6-7 என நேர் செட்களில் ஜீவன் நெடுஞ்செழியன்-ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.

இதேபோல் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் டிவிஜ் சரண்-ஜேக்சன் வித்ரோ ஜோடி 7-6, 6-3 என நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் மேத்யு எப்டன்- உக்ரைனின் செர்ஜி ஸ்டாக்ஸ்கை ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.