டென்னிஸ்
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: நடால் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் நடால் அரைஇறுதிக்கு முன்னேறினார்.
டோராண்டோ,

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்), 7-வது இடத்தில் இருக்கும் மரின் சிலிச்சை (குரோஷியா) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 2-6 என்ற கணக்கில் இழந்த ரபெல் நடால் சரிவில் இருந்து மீண்டு அடுத்த 2 செட்களையும் 6-4, 6-4 என்ற கணக்கில் தனதாக்கி மரின் சிலிச்சை சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறினார். நடால் அடுத்து கரென் காச்சனோவை (ரஷியா) சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள 19 வயதான கிரீஸ் வீரர் ஸ்டெபோனஸ் சிட்சிபாஸ் 3-6, 7-6 (13-11), 6-4 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான அலெக்சாண்டர் ஸ்வெரேவை போராடி வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 6-2, 6-2 என்ற நேர்செட்டில் பல்கேரியா வீரர் டிமிட்ரோவை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 7-5, 6-1 என்ற நேர்செட்டில் 6-ம் நிலை வீராங்கனை கரோலின் கார்சியாவை (பிரான்ஸ்) தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். அரைஇறுதியில் சிமோனா ஹாலெப், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டியை சந்திக்கிறார். முன்னதாக ஆஷ்லே பார்ட்டி 6-3, 6-1 என்ற நேர்செட்டில் கிகி பெர்டென்சை (நெதர்லாந்து) சாய்த்தார்.

மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் லாத்வியாவின் செவஸ்டோவாவை தோற்கடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

இதேபோல் நடப்பு சாம்பியன் ஸ்விடோலினா (உக்ரைன்) 7-5, 6-3 என்ற நேர்செட்டில் எலிஸ் மெர்டென்சை (பெல்ஜியம்) வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.