டென்னிஸ்
‘அன்னை’ சானியா!

தனது வாரிசை சுமந்திருக்கிறார், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா.
தனது வாரிசை சுமந்திருக்கிறார், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா.

அந்தப் பெருமிதம், பூரிப்பு அவரது முகத்தில் தெரிகிறது.

ஆனால்...

‘‘என் உடம்பில் மினுமினுப்பு ஏறியிருக்கிறது என்று சொல்லாதீர்கள். நான் வெயிட் போட்டிருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்!’’ எனச் சிரிக்கிறார்.

இப்போது குழந்தை பெற்றுக்கொள்வது, திட்டமிட்ட ஒன்றா, இதுகுறித்து சானியாவும் அவரது கணவர் சோயிப் மாலிக்கும் நீளமாக விவாதித்து முடிவு செய்தார்களா?

‘‘நாங்கள் திருமணம் செய்துகொண்டபோது, நாம் நமது விளையாட்டு வாழ்வில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என்பதுதான் எங்கள் திட்டமாயிருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே, தாயாவதற்கு நான் ஆர்வம் காட்டியதைவிட, தந்தையாக சோயிப் அதிக ஆர்வம் காட்டினார். ஆனால் அவர் எப்போதும் என்னிடம், ‘நாம குழந்தை பெத்துக்கணும்... அதுக்கு இதுதான் சரியான நேரம்’ என்று சொன்னதில்லை. அது நான் மிகவும் மதிக்கும் குணம். பொதுவாகவே, குழந்தை விஷயத்தில் கணவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அப்படி மனைவி நடந்துகொள்ள வேண்டும் என்ற மனோபாவம் இருக்கிறது. ஆனால் எனக்கு அப்படி எந்த நெருக்கடியும் இல்லை. எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்ததே தவிர, அது எப்போது என்றெல்லாம் முடிவு செய்யவில்லை’’ என்று விலா வரியாய் விளக்குகிறார்.

தொடர்ந்து அவர், ‘‘நான் கர்ப்பமானது வெகு யதேச்சையாகத்தான். அந்த நாட்களில் நான் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். எனவே அது பற்றித்தான் கொஞ்சம் கவலையாக இருந்தது. கர்ப்பத்தின் ஆரம்பத்தில் ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும் என்று பலரும் அறிவுரை கூறினார்கள். உடற்பயிற்சியைக் குறைத்துக்கொண்டாலும் தொடர்ந்து சுறுசுறுப்பாகவே இருந்துவந்தேன். சில சமயங்களில் மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் தவிர, இதுவரை நான் கர்ப்பகால கஷ்டங் களையும் பெரிதாக அனுபவிக்கவில்லை’’ என்கிறார்.

‘சுறுசுறுப்பாக இருந்தீர்கள் என்றால், டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் போலவா? அவர் தனது கர்ப்ப காலத்தில் எட்டாவது மாதம் வரை டென்னிஸ் விளையாடினார் என்றெல்லாம் தகவல் உலா வந்ததே?’ என்று கேட்டால்...

‘‘செரீனா தனது கர்ப்பத்தின் எட்டாவது மாதம் வரை டென்னிஸ் விளையாடியிருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தார் என்பது உண்மை. அவரல்ல, எல்லாப் பெண்களுமே கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் அவர்கள் கர்ப்பத்துக்கு முன்பும் உடற்பயிற்சி செய்து வந்திருக்க வேண்டும். கர்ப்பத்தைக் காரணம் காட்டி நாம் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து விடக் கூடாது. பெரிதாகப் பிரச்சினை ஏதும் இல்லையென்றால், தொடர்ந்து மெதுவான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதே சரி.

நான் இரண்டாவது, மூன்று மாத காலத்தில், வாரத்துக்கு நான்கு முறை யோகா செய்து வந்தேன். ஆனால் அதற்கு எங்கம்மாவை அனுமதிக்கச் செய்வதுதான் கடினமாக இருந்தது. சீக்கிரம் களைப்படைந்து விடுகிறேன் என்றாலும், இப்போதும்கூட நான் தினமும் நான்கு முதல் ஐந்து கி.மீ. தூரம் நடக் கிறேன். தற்போது டென்னிஸ் விளையாட முடியாத வருத்தம் இருக்கிறது. எங்கள் வீட்டிலேயே ஒரு டென்னிஸ் கோர்ட் இருக்கிறது. ஆனால் நான் இப்போது அதன் பக்கம் போனேன் என்றால், எங்கம்மா கொன்று போட்டு விடுவாங்க!’’ என்று மறுபடி சிரிக்கிறார்.

சரி, கர்ப்ப காலத்தில் சானியா உணவுகள் விஷயத்தில் எப்படி?

‘‘அதிர்ஷ்டவசமாக, கர்ப்ப காலத்தில் இனிப்புகள் மீதான எனது ஆர்வம் குறைந்துவிட்டது. எனது உணவியல் நிபுணர், மைதா உணவுகளைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தினார். எனக்கு எப்போதும் சாதம் பிடிக்கும். ஆனால் இப்போது விசித்திரமாக, அறிவுரையை மீறி, ‘நான்’ கேட்கிறேன். கர்ப்ப காலத்தில் வித்தியாசமான சாப்பாட்டு ஆசைகள் எழுவது ஆச்சரியமாக இருக்கிறது’’ என்பவர், அடுத்து உணர்வுபூர்வமான விஷயத்துக்குத் தாவுகிறார்...

‘‘ஒரு சுயபுரிதலை கர்ப்பம் ஏற்படுத்தியிருப்பதாக நான் நினைக்கிறேன். நம் உடம்பு என்ன செய்யும், என்னவெல்லாம் நம் உடம்பால் உருவாக்க முடியும் என்று ஒரு பெண்ணாக நாம் சில நேரங்களில் உணர்வதில்லை. நாம் அதற்கு உட்படும்போது, அதாவது கருவைச் சுமக்கும்போதுதான் அதை உணரவும், புரிந்துகொள்ளவும் முடிகிறது.’’

மற்றொரு விந்தையான தகவலையும் அவர் சொல்கிறார். சானியாவை அவரது அம்மா வயிற்றில் சுமந்திருந்தபோது அவர் பிறப்பதற்காகக் குறிக்கப்பட்ட தேதியும், தற்போது இவர் குழந்தை பெறுவார் என்று கணிக்கப்பட்டிருக்கும் தேதியும் ஒன்று தானாம்.

‘‘இது வேடிக்கையானது. மற்றொரு விசேஷம், நான் எங்கம்மாவின் பிறந்த நாளன்று பிறந்தேன்’’ என்று புன்னகைக்கிறார்.

பிரசவம் குறித்த பயம் மனதுக்குள் இருக்கிறதா என்று கேட்டால்...

‘‘பயத்தை விட படபடப்பு என்று சொல்லலாம். ஆனால் என்னை எங்கள் டாக்டர் பெண்மணி நன்றாக கவனித்துக்கொள்கிறார். நான் பட படப்புக் கொள்ளும்போதெல்லாம் என்னை அமைதிப்படுத்துவது அவர்தான். அவரால்தான் நான் இங்கே ஐதராபாத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தேன்’’ என்று நிதானமாகப் பதிலளிக்கிறார்.

ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை, எதை எதிர்பார்க்கிறது, சோயிப்- சானியா தம்பதி?

‘‘அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால் என் கணவருக்கு பெண் குழந்தை என்றால் ரொம்பப் பிடிக்கும்!’’

பிறக்கும் குழந்தை, அப்பாவைப் போல கிரிக்கெட் விளையாடுமா? அம்மாவைப் போல டென்னிஸ் விளையாடுமா?

‘‘குழந்தை பிறந்து வளர்ந்தபின்தானே அதெல்லாம். உண்மையில் எனக்கு என் குழந்தையை டாக்டராக்க ஆசை... ஹா... ஹா...’’

முடிவான கேள்வியாக, ‘‘பிறக்கும் குழந்தை இந்தியரா, பாகிஸ்தானியா?’’ என்று கேட்டதும் சானியாவிடம் இருந்து ‘சரேல்’ என்று பதில் வருகிறது...

‘‘அதையெல்லாம் பின்னால் பார்த்துக்கொள்ளலாம். ஏன், இந்தியா, பாகிஸ்தான் தவிர, மூன்றாவது நாடாகக் கூட இருக்கலாம் அல்லவா?’’