பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து கனடா வீரர் ஷபோவலோவ் விலகல்

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற களிமண் தரையில் அரங்கேறும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.

Update: 2021-05-24 21:30 GMT

இந்த போட்டியில் இருந்து உலக தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் 22 வயதான கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவ் விலகி இருக்கிறார். கடந்த வாரம் நடந்த ஜெனீவா ஓபன் இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட ஷபோவலோவ் தோள்பட்டை காயம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளார்.

இது குறித்து ஷபோவலோவ் தனது டுவிட்டர் பதிவில், ‘எனது மருத்துவ குழுவினருடன் கலந்து ஆலோசித்த பிறகு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவது என்ற கடினமான முடிவை எடுத்தேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். எதிர்பாராதவிதமாக தோள்பட்டை காயம் எனக்கு தொல்லை கொடுத்து வருகிறது. மருத்துவ பரிசோதனைகள் எல்லாம் நல்லபடியாக இருந்தாலும், ஓய்வு எடுப்பது தான் சிறந்தது என்று தெரிவித்ததால் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். அடுத்த ஆண்டு (2022) பிரெஞ்ச் ஓபன் போட்டியில் பார்க்கலாம்’ என்று தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகும் 3-வது நபர் ஷபோவலோவ் ஆவார். ஏற்கனவே முன்னாள் சாம்பியன் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) ஆகியோர் காயம் காரணமாக விலகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்