ஆஸ்திரேலிய ஓபனில் ரோகன் போபண்ணா சாதனை; பரிசு தொகை எவ்வளவு?

2017-ம் ஆண்டில் நடந்த பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையர் போட்டியில், கனடாவின் கேப்ரியலா தப்ரோவ்ஸ்கியுடன் சேர்ந்து விளையாடி போபண்ணா வெற்றி பெற்றார்.

Update: 2024-01-27 19:24 GMT

சிட்னி,

டென்னிஸ் போட்டிகளில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில், சனிக்கிழமை நடந்த ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் அவருடன் இணைந்து விளையாடிய மேத்யூ எப்டென் இணை அதிரடியாக விளையாடியது.

இந்த இணை 7-6 (7/0), 7-5 என்ற செட் கணக்கில், எதிர்த்து விளையாடிய இத்தாலியை சேர்ந்த சிமோன் போலெல்லி மற்றும் ஆண்ட்ரி வாவஸ்சோரி இணையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பட்டம் வென்ற போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் இருவருக்கும் மொத்தம் 7 லட்சத்து 30 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் (3 லட்சத்து 77 ஆயிரத்து 700 பவுண்டுகள்) பரிசாக கிடைக்கும். இந்த தொகையானது இந்திய மதிப்பில், மொத்தம் ரூ.3 கோடி 98 லட்சம் ஆகும். இதன்படி போபண்ணாவுக்கு ஏறக்குறைய ரூ.2 கோடி பரிசு தொகை கிடைக்கும்.

போபண்ணாவுக்கு இது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். இதற்கு முன்னர், 2017-ம் ஆண்டில் நடந்த பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையர் போட்டியில், கனடாவின் கேப்ரியலா தப்ரோவ்ஸ்கியுடன் சேர்ந்து விளையாடி போபண்ணா வெற்றி பெற்றார். இந்தியாவுக்காக லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி ஆகியோர் ஆடவர் பிரிவிலும், சானியா மிர்சா பெண்கள் பிரிவிலும் பெரிய பட்டங்களை வென்றிருந்தனர்.

இந்த சூழலில், ஆடவர் இரட்டையர் வரலாற்றில் அதிக வயதில் பட்டம் வென்றவர் (43 வயது) என்ற பெருமையை போபண்ணா பெற்றுள்ளார். இதற்காக 60 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடி, போராடி இறுதியாக வெற்றியை அடைந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்