உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்

கீவ்,

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை மேற்கத்திய நாடுகள் வழங்கினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என புதின் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நாசகார ஏவுகணைகள்

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 100 நாட்களை கடந்து தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதனால் உக்ரைன் தொடர்ந்து நிலைகுலைந்து வருகிறது.

உக்ரைனின் பல்வேறு பகுதிகளை அடுத்தடுத்து இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, தற்போது தலைநகர் கீவ் நகரை மீண்டும் இலக்காக்கி இருக்கிறது. இதனால் போர் மீண்டும் வேகமெடுத்து உள்ளது.

அங்கு நேற்று முன்தினம் வான்வழி தாக்குதலை நடத்தியது. நாசகார ஏவுகணைகளை அடுத்தடுத்து வீசிய ரஷியா, இதன் மூலம் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.

ரெயில் தொழிற்சாலை

குறிப்பாக உக்ரைனுக்கு வெளிநாடுகள் வழங்கிய பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக ரஷியா தெரிவித்து உள்ளது. இதில் உயிரிழப்புகள் நடந்திருப்பதாக உக்ரைனும் ஒப்புக்கொண்டு உள்ளது.

அந்தவகையில் ரஷியா ஏவிய ஏவுகணை ஒன்று கீவில் உள்ள ரெயில் என்ஜின் பழுதுபார்க்கும் தொழிற்சாலையை பதம் பார்த்ததாகவும், மற்ற ஏவுகணைகள் டிரஸ்கிவ்கா நகரில் கட்டிடங்களை சேதப்படுத்தியதாகவும், இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேநேரம் ரஷிய பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், போரில் பழுதான உக்ரைன் தளவாடங்களை பழுதுநீக்கும் தொழிற்சாலைகளையும் இந்த தாக்குதலில் இலக்காக கொண்டிருந்ததாக தெரிவித்தார்.

பீரங்கிகள் அழிப்பு

இதற்கிடையே எக்ஸ்-22 ரகத்தை சேர்ந்த 5 நீண்டதூர ஏவுகணைகளை காஸ்பியன் கடலில் இருந்து கீவை நோக்கி ரஷியா வீசியதாகவும், இதில் ஒன்றை நடுவானிலேயே அழித்தாகவும் உக்ரைன் தளபதி ஒருவர் கூறினார்.

மீதமுள்ள 4 ஏவுகணைகளும் உக்ரைனின் உள்கட்டமைப்பு வசதிகளை தாக்கியதாக கூறிய அவர், இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறினார். கீவை தாக்கிய ஏவுகணைகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிற நாடுகள் வழங்கிய கவச வாகனங்கள் மற்றும் டி-72 பீரங்கிகளை அழித்ததாக ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.

உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்

https://www.dailythanthi.com/News/World/missile-attack-in-ukraine-capital-kyiv-by-russian-forces-716916

இதற்கிடையே ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று முன்தினம் டி.வி. மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்து வரும் மேற்கத்திய நாடுகளுக்கு கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்தார்.

அவர் கூறுகையில், 'உக்ரைனுக்கு ஆயதங்களை வினியோகிப்போருக்கு ஒரேயொரு குறிக்கோள் மட்டுமே இருக்க முடியும். அதாவது இந்த போரை முடிந்தவரை நீட்டிப்பதே அவர்களின் இலக்கு என்பதே எனது கருத்தாகும்' என்று தெரிவித்தார்.

அதேநேரம் உக்ரைனுக்கு நீண்டதூர ஏவுகணைகளை வழங்கினால், இன்னும் தாக்காத இடங்களையும், வசதிகளையும் தாக்குவதற்கான தகுந்த முடிவுகளை ரஷியா எடுக்கும் என எச்சரித்த புதின், அத்துடன் எங்களிடம் ஏராளமாக உள்ள அழிவு ஆயுதங்களையும் பயன்படுத்துவோம் என்றும் கூறினார்.

உக்ரைனுக்கு மேலும் நவீன ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் சமீபத்தில் அறிவித்து இருந்தன. இதைத்தொடர்ந்து புதின் விடுத்துள்ள மிரட்டல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Update: 2022-06-07 08:29 GMT

Linked news