சினிமா செய்திகள்
வில்லன் நடிகரை கதாநாயகி பக்கம் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்ட கதாநாயகன்

கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் நகைச்சுவை திகில் படம், ‘காட்டேரி.’ வைபவ் கதாநாயகனாக நடிக்க, வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பாஜ்வா ஆகிய 3 பேரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள்.
ரவிமரியா வில்லனாகவும், கருணாகரன் நகைச்சுவை வேடத்திலும் நடித்துள்ளனர். ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டீகே டைரக்டு செய்திருக்கிறார்.

படக்குழுவினர் அனைவரும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது வில்லன் நடிகர் ரவிமரியா நகைச்சுவையாக பேசி, கலகலப்பூட்டினார். அவர் பேசியதாவது:–

‘‘இந்த படத்தின் கதாநாயகன் வைபவும், நகைச்சுவை நடிகர் கருணாகரனும் என்னை கதாநாயகி பக்கமே நெருங்கவிடாமல் சதி செய்து பார்த்துக்கொண்டார்கள். திகில் படங்களில், ‘சந்திரமுகி’க்கு அடுத்தபடியாக புதுவிதமான திரைக்கதை அமைப்பில் உருவாகியுள்ள படம் இதுதான். பாக்யராஜ் போல் வித்தியாசமாக யோசித்து திரைக்கதை அமைத்து இருக்கிறார், டீகே.

ஒரு காட்சியில், வரலட்சுமி என்னை காலினால் உதைக்க வேண்டும். அதற்கு முன்பு அவர், ‘‘நான் டைரக்டர் பாலாவின் மாணவி. உதைப்பது எல்லாமே நிஜமான உதையாக இருக்கும்’’ என்று என்னை பயமுறுத்தினார். இன்னொரு நாயகி சோனம் பாஜ்வாதான் என்னுடன் கடைசி வரை ஒட்டவே இல்லை.’’

இவ்வாறு ரவிமரியா பேசினார்.

படத்தின் கதாநாயகன் வைபவ், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, டைரக்டர் டீகே, இசையமைப்பாளர் பிரசாத் ஆகியோரும் பேசினார்கள்.