நாளை திரையரங்குகளில் வெளியாகும் 5 திரைப்படங்கள் (14-11-2025)
நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.;
சென்னை,
தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அவை வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வெளியிடப்படுகின்றன. அதற்கு காரணம் அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் தான். அந்தவகையில் நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்
இந்நிலையில் நவம்பர் 14ம் தேதி 5 திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அதன்படி, காந்தா, மதராஸ் மாபியா கம்பெனி, ஆட்டோகிராப் (ரீ ரிலீஸ்), கிணறு, தாவுத் ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளன.
துல்கர் சல்மானின் 'காந்தா', ஆனந்தராஜின் 'மதராஸ் மாஃபியா கம்பெனி', சேரனின் 'ஆட்டோகிராப்' (ரீ ரிலீஸ்), சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள 'கிணறு', 'தாவுத்' ஆகிய படங்கள் நாளை திரைக்கு வருகின்றன.
1. காந்தா
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் ‘காந்தா’ படத்தில் பாக்யஸ்ரீ , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கைக் கதையாக உருவாகியுள்ள இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
2. மெட்ராஸ் மாபியா கம்பெனி
அறிமுக இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மெட்ராஸ் மாபியா கம்பெனி. வடசென்னை பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஆனந்தராஜ் தாதாவாக நடித்துள்ளார். மேலும் சம்யுக்தா, முனிஷ்காந்த், தீபா, ஷகீலா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமும் நாளை திரைக்கு வருகிறது.
3. ஆட்டோகிராப் (ரீ ரிலீஸ்)
சேரன் தயாரித்து இயக்கி, நடித்த 2004 ஆம் ஆண்டு வெளியான 'ஆட்டோகிராப்' படம் நாளை மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சேரனுடன் சினேகா, கோபிகா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்காக தேசிய விருதும் இப்படம் பெற்றிருந்தது. 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் திரைக்கு வரும் இப்படம் தமிழகத்தில் 120க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
4. கிணறு
குழந்தைகளை மையப்படுத்தி அறிமுக இயக்குநர் ஹரிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிணறு’. விவேக் பிரசன்னா மற்றும் நான்கு புதுமுக சிறுவர்கள் இதில் நடித்துள்ளனர். கிராமத்து சிறார்கள் கிணற்றில் நீராட வேண்டும் என்ற உளவியல் ரீதியிலான ஆசையை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மெட்ராஸ் ஸ்டோரீஸ் மற்றும் பெட்ரா ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இதற்கு புவனேஷ் செல்வநேசன் இசையமைத்துள்ளார். பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ள இப்படம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாளை திரைக்கு வருகிறது.
5. தாவுத்
அறிமுக இயக்குனர் பிரசாந்த் ராமன் இயக்கத்தில், உடன்பால், பென்குயின், சேதுபதி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த லிங்கா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் தாவுத் திரைப்படமும் நாளை திரைக்கு வருகிறது.
6. கும்கி 2
பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கும்கி 2’ கதாநாயகனாக மதியழகன் அறிமுகம் ஆகிறார். ஹரிஷ் பெராடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். . நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.