அஜித்தை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்த நடிகர் சூரி
நடிகர் அஜித் குமாரை சந்தித்தது குறித்து நடிகர் சூரி தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.;
‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம், நடிகர் சூரி காமெடி நடிகராக உயர்ந்தார். விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வேதாளம், ரஜினியின் அண்ணாத்தே, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரின் படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தினார்.
வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம், கதாநாயகனான சூரி, அதன்பிறகு கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்களிலும் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் வணிக ரீதியான வெற்றிகளைப் பதிவு செய்தன. கருடன் மற்றும் மாமன் நல்ல வசூலை ஈட்டின. தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளார்.தற்போது, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நடிகரும் ரேஸருமான அஜித் குமாரை நடிகர் சூரி சந்தித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “அஜித் சாரை பார்த்த நொடியிலேயே புரிந்தது, உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல; அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது. அவருடனான உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது” என கூறியுள்ளார்.