நடிகை அம்பிகா- ராதாவின் தாயார் காலமானார்
கேரள மகிளா காங்கிரசின் தலைவராக பதவி வகித்த சரசம்மா நாயர் நேற்று காலமானார்.;
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகைகளான அம்பிகா. ராதா ஆகியோரின் தாயார் சரசம்மா (வயது 86). கேரள மாநிலம் கல்லாரையில் வசித்து வந்த சரசம்மா நேற்று காலமானார். சரசம்மாவின் கணவர் ஏற்கனவே காலமாகிவிட்டார். அவருக்கு அம்பிகா, மல்லிகா, ராதா என்ற மகள்களும், மல்லிகார்ஜுன், சுரேஷ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். அம்பிகா மற்றும் ராதா இருவரும் 80 மற்றும் 90-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரே சமயத்தில் கொடிக்கட்டிப் பறந்தவர்கள்.
கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட சரசம்மா நாயர், பெண்களின் உரிமைகளுக்காக போராடுவதில் தீவிரமாக இருந்தார். அரசியல் பணிகளில் ஈடுபட்டு கேரள மகிளா காங்கிரசின் தலைவராக 2014-ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
தாயார் மறைவு குறித்து அம்பிகா வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில் “நானும் என் அம்மாவும் தான் இருந்தோம். ஆனால் அவர் இப்போது என் அப்பாவுடன் மேலே சென்றுவிட்டார். இனி நான் மட்டும்தான் ” என குறிப்பிட்டுள்ளார்.
சரசம்மா நாயர் அவர்களது இறுதி சடங்கு, அவரது சொந்த ஊரான திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லாராவில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்று அவரது குடும்பத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் திரையுலகை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும், சரசம்மா நாயரின் மறைவுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்