கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி திணறிய நடிகை நிதி அகர்வால்
'தி ராஜா சாப்' படத்தின் 2வது பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.;
பான் இந்தியா நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் அடுத்து திரைக்கு வர இருக்கும் படம் 'தி ராஜா சாப்'. மாருதி இயக்கிய இந்த திகில் நகைச்சுவை படம் ஜனவரி 10-ம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது.
பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாகவும், சஞ்சய் தத் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், 'தி ராஜா சாப்' படத்தின் 2வது பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள பிரபலமான மாலில் நடைபெற்றது. அதில் நடிகை நிதி அகர்வால், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பாதுகாப்பு தடுப்புகளை மீறி நடிகையை பார்க்க முன் வந்ததால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு நடிகை அங்கிருந்து வெளியே வரும்போது ரசிகர்கள் சூழ்ந்துவிட்டனர். சிலர் அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக தெரிகிறது. இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி திணறிய நடிகை நிதி அகர்வால் எப்படியோ காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார். ஆனால், காரில் ஏறியவுடன் அவர் முகம் கடும் கோபத்துடன் காணப்பட்டது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.