‘ஹாலிவுட்டில் நடிகைகள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள்’ - கிறிஸ்டென் ஸ்டீவர்ட் பரபரப்பு குற்றச்சாட்டு

நடிகைகளை பொம்மைகள் போல் நடத்துகிறார்கள் என நடிகை கிறிஸ்டென் ஸ்டீவர்ட் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-26 21:59 IST

வாஷிங்டன்,

ஹாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் கிறிஸ்டென் ஸ்டீவர்ட். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்த இவர், 1999-ம் ஆண்டு தனது 8-வது வயதில் 'தி தர்டீன்த் இயர்' என்ற படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்த கிறிஸ்டென் ஸ்டீவர்ட், 'ட்வைலட்'(Twilight) திரைப்படத்தில் பிரபல நடிகர் ராபர்ட் பாட்டின்சனுடன் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமடைந்தார். கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'ஸ்பென்சர்'(Spencer) திரைப்படத்தில் மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் கதாபாத்திரத்தில் கிறிஸ்டென் ஸ்டீவர்ட் நடித்திருந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு கிறிஸ்டென் ஸ்டீவர்ட் தன்னை ஒரு தன்பாலின ஈர்ப்பாளராக அறிவித்துக் கொண்டார். அதோடு பிரபல ஹாலிவுட் திரைக்கதை எழுத்தாளர் நிக்கோலஸ் மேயரின் மகளும், தனது நீண்ட நாள் தோழியுமான டைலான் மேயர் என்ற பெண்ணை காதலிப்பதாக கிறிஸ்டென் ஸ்டீவர்ட் அறிவித்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், நடிகை கிறிஸ்டென் ஸ்டூவர்ட் ‘தி க்ரோனாலஜி ஆப் வாட்டர்’ என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். அந்த படத்திற்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் நல்ல வரவேற்பை கிடைத்தது. இந்த சூழலில், ஹாலிவுட்டில் நடிகைகள் நடத்தப்படும் விதம் குறித்து கிறிஸ்டென் ஸ்டீவர்ட் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “ஹாலிவுட்டில் நடிகைகள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள். நான் ஒரு இயக்குநராக எனது திரைப்படம் குறித்து பேசுவதற்கு அமர்ந்தபோது, அந்த அனுபவம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஒரு அறிவுள்ள நபரிடம் பேசுவதுபோல் இப்போது என்னிடம் பேசுகின்றனர்.

இயக்குநர்களுக்கு அற்புதமான ஆற்றல்கள் இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. அந்த கருத்து ஆண்களால் உருவாக்கப்பட்டது. குறை கூற வேண்டும் என்பதற்காக நான் சொல்லவில்லை, ஆனால் உண்மையில் நடிகர்களை விட நடிகைகளின் நிலைதான் மோசமாக இருக்கிறது.

நடிகைகள் பொம்மைகள் போல் நடத்தப்படுகிறார்கள். ஆனால் நடிகர்களுக்கு அவ்வாறு நடப்பதில்லை” என்று கூறியுள்ளார். ஹாலிவுட்டில் நடிகைகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கிறிஸ்டன் ஸ்டீவர்ட் ஏற்கனவே பலமுறை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்