"என்னுடன் சென்னை வருகிறாயா...?" - பூனையை கொஞ்சும் அஜித்குமார்
பைக் ரைட் செய்யும் காஸ்ட்யூமுடன் அஜித் ஒரு பூனைக் குட்டியை கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.;
தமிழ் திரையுலகில் டாப் நடிகராக இருப்பவர் அஜித். திரையுலகில் உச்சத்தில் இருந்த போதிலும் கார் ரேசிலும் ஈடுபாடுடன் கலந்து கொண்டு சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறார் அஜித். பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டிகளில் அஜித் பங்கேற்று வருகிறார். பெல்ஜியமில் கடந்த வாரம் நடைபெற்ற கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி3 சாம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். பிரிவில் அஜித்குமார் கார் ரேஸ் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியிருந்தது. ஏற்கனவே, துபாயில் நடந்த ரேஸில் அஜித்தின் 'அஜித்குமார் ரேஸிங்' அணி 3வது இடம் பிடித்து சாதித்தது. இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில் நடந்த போட்டிகளிலும் பரிசுகளை வென்று இருந்தது.
இந்த ஆண்டு விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் வெளியாகிய நிலையில், நடிகர் அஜித் குமார், படப்பிடிப்புகளில் இருந்து விலகி கார் ரேசிங் மற்றும் பைக் ரைடிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த ஜூன் 7ம் தேதி அஜித் ரொமேனியா, பல்கேரியா நாடுகளில் பைக் ரைட் செய்யப்போவதாக அவரது வீனஸ் மோட்டார் சைக்கிள் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பைக் ரைட் செய்யும் காஸ்ட்யூமுடன் அஜித் ஒரு பூனைக் குட்டியை கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அஜித் குமார் பூனையை மடியில் வைத்துக்கொண்டு, "நீ இந்தியா வருகிறாயா, சென்னை வருகிறாயா... நான் உன்னை சென்னையில் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்" எனக் கேட்கிறார். பூனையின் அசைவுகளை அவர் மெச்சுவது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் குமார் சினிமாவைக் கடந்து பைக் ரைடிங், கார் ரேசிங், துப்பாக்கிசூடு, விமான பொறியியல் என பல்வேறு துறைகளில் ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.