ஆபாசமாக படங்களில் நடித்து பணம் சம்பாதித்ததாக வழக்கு: ‘எனக்கு எதிராக சதி செய்கின்றனர்’ - நடிகை சுவேதா மேனன்
நடிகை சுவேதா மேனன் மீது 2 பிரிவுகளின் கீழ் கொச்சி மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;
கோப்புப்படம்
பெரும்பாவூர்,
மலையாள பிரபல நடிகை சுவேதா மேனன். இவர் பொருளாதார லாபம் ஈட்டுவதற்காக ஆபாசமாக நடித்து பணம் சம்பாதித்ததாக கூறி கொச்சியை சேர்ந்த மார்டின் மேனாச்சேரி என்பவர் எர்ணாகுளம் ஜுடிசியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சுவேதா மேனன் ஆபாச விளம்பரத்தில் நடித்து, அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து உள்ளார். எனவே, அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, நடிகை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, நடிகை சுவேதா மேனன் மீது 2 பிரிவுகளின் கீழ் கொச்சி மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு எதிராகவும், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நடிகை சுவேதா மேனன் எர்ணாகுளம் முதன்மை ஜுடிசியல் கோர்ட்டை அணுக உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கொச்சியில் நிருபர்களிடம் கூறும்போது, மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் (அம்மா) தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன். எனக்கு எதிராக ஒரு தரப்பினர் திட்டமிட்டு செய்த சதி காரணமாகவே, இந்த வழக்கு போடப்பட்டு உள்ளது. இதனை சட்டப்படி சந்திக்க உள்ளேன். அத்துடன் என் மீது எந்த குற்றமும் இல்லை என்பதை நிரூபிப்பேன். அதற்காக தன்னிலை விளக்கம் கொண்ட மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளேன் என்றார்.