துல்கர் சல்மானின் "காந்தா" திரைப்படத்திற்குத் தடை கோரி வழக்கு
துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ நடித்துள்ள ‘காந்தா’ படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் ‘காந்தா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கைக் கதையாக உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வருகிற 14ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், காந்தா திரைப்படத்துக்குத் தடை கோரி பாகவதரின் மகள் வழி பேரன் மனு வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது, பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள காந்தா படத்தை, எடுப்பதற்கு முன் அவரின் சட்டப்பூர்வ வாரிசுகளின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் நடிகர் துல்கர் பதிலளிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.