நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்று வரும் முத்தமிழ் பேரவை இசை விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கி கவுரவித்தார் .;

Update:2025-12-15 20:46 IST

தமிழ் திரையுலகின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நாசர். தனது தனித்துவமான நடிப்பு, நம்பிக்கையான குரல், மிகுந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றால் பல்வேறு கதாபாத்திரங்களில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து மிகுந்த கவனம் பெற்றுள்ள இவர், தமிழ் சினிமாவின் ஒரு பொக்கிஷம் என்றே சொல்லலாம். வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதற்கு உயிரூட்டும் வல்லமை கொண்ட அவர், தமிழ் சினிமாவின் மகா நடிகராகவும் பாராட்டப்படுகிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது அதே பொறுப்பில் பணியாற்றி வரும் நாசர், சமூக மற்றும் அரசியல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். 

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் முதலமைச்சர் முத்தமிழ்ப் பேரவையின் விருது மற்றும் இசை, நாட்டிய விழா இன்று நடைபெற்றது. இதில், விருது அறிவிக்கப்பட்ட கலைஞர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி கவுரவித்தார். இதில், திரைப்படங்களில் நடித்து, கதாசிரியர், பாடலாசிரியர் என பல்வேறு பரிணாமங்களை எட்டிய நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.

இதேபோன்று இசை, நடனம் என பல துறைகளில் சிறந்த விளங்கியவர்களுக்கு முதல்-அமைச்சர் விருது வழங்கினார். நாதஸ்வர கலைஞர் வடுவூர் எஸ்.என்.ஆர். மூர்த்திக்கு ராஜரத்னா விருது வழங்கப்பட்டது. நகைச்சுவை தென்றல் என்ற பட்டம் பெற்ற புலவர் சண்முக வடிவேலனுக்கு இயல் செல்வம் விருது வழங்கப்பட்டது. கர்நாடக இசைக் கலைஞர் காயத்ரி வெங்கடராமனுக்கு இயல் செல்வம் விருது அளிக்கப்பட்டது. நடனக் கலைஞர் அனிதா நாட்டிய சேவையை பாராட்டி நாட்டிய செல்வம் விருது வழங்கப்பட்டது. டிகேஆர் ஐயப்பன், டிகேஆர் மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு நாதஸ்வர செல்வம் விருது வழங்கப்பட்டது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தவில் உதவி பேராசிரியராக உள்ள நாகூர் செல்வகணபதிக்கு தவில் செல்வன் விருது வழங்கப்பட்டது. மிருதங்க கலைஞர் தஞ்சை முருகபூபதிக்கு மிருதங்கச் செல்வன் விருது வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்