இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம்: பெங்களூருவில் சிறப்பு இசை நிகழ்ச்சி
பெங்களூருவில் வரும் ஜனவரி 10ம் தேதி இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
பெங்களூரு,
1976-ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்து அசத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
இளையராஜா, லண்டனில் தனது கனவு படைப்பான 'வேலியண்ட்' சிம்பொனியை கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி அரங்கேற்றி உலக சாதனை படைத்தார். இசை பயணத்தில் 50 ஆண்டு பொன்விழாவையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இளையராஜாவுக்கு தமிழக அரசின் சார்பில் பாராட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இசைஞானி இளையராஜா தற்போது படங்களுக்கு இசையமைப்பது குறைந்துள்ளது என்றாலும் அடிக்கடி சில இடங்களில் இசைக் கச்சேரிகளை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகிறார்.
இந்நிலையில், பெங்களூருவில் வருகிற ஜனவரி 10ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை, அக்சய பாத்ரா அறக்கட்டளையின் வெள்ளி விழாவுடன் இணைந்து சிறப்பு இசை நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் ஜனவரி 10ம் தேதி பெங்களூரில் உள்ள மாதவராவில் உள்ள நைஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
அக்சய பாத்ரா அறக்கட்டளை ‘மியூசிக் பார் மீல்ஸ்’ நிகழ்ச்சியை பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த நடத்துகிறது. இந்த அறக்கட்டளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்தான மதிய உணவை வழங்கி வருகிறது. இளையராஜா, அக்சய பாத்ரா அறக்கட்டளை தன்னை அணுகியதும் இசை நிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார்.