காதல் குறித்த கேள்விக்கு தனுஷின் பதில்
ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் வரும் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.;
நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தேரே இஷ்க் மே’. ஆனந்த் எல் ராய், தனுஷின் முந்தைய பாலிவுட் படங்களான 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' ஆகிய படங்களை இயக்கியவர். முன்னணி பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 28-ம்தேதி வெளியாக இருக்கிறது.
இந்தி, தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இது காதல் படம் என்பதால் தனுஷ் மற்றும் கீர்த்தி சனோனிடம் அதுபற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.
தனுஷ் கூறும்போது, “காதல், மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி என்று நினைக்கிறேன்” என்றார். தனுஷின் பதிலால் ஆச்சரியமடைந்த செய்தியாளர்கள், கீர்த்தி சனோனிடம் கேட்டனர்.
கிரித்தி சனோன் “நான் காதலை முழுமையாக நம்புகிறேன். உண்மையான மற்றும் ஆழமான காதலுக்கு பல வரையறைகள் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் நீங்கள் காதலுக்காக மாற வேண்டிய அவசியமில்லை. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள். தயக்கமின்றி ஒருவருடன் சிரிக்க முடிந்தால் அதுதான் காதல் என்பது என் கருத்து” என்றார்.