நீதிமன்ற தீர்ப்புக்கு பின் வெளியாகும் திலீப் திரைப்படம்
திலீப் நடித்த ‘ப ப ப’ திரைப்படம் வரும் 18ம் தேதி வெளியாகிறது;
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர், திலீப். கடந்த 30 ஆண்டு சினிமா வாழ்க்கையில், 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவர். திலீப் இதுவரை நடித்துள்ள படங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான படங்களில் நகைச்சுவை பிரதானமாக அமைந்திருப்பதை பார்க்க முடியும். அதுதான் அவரது பாணியும்கூட. காதல், சென்டிமெண்ட், அதிரடி படம் என்று எதுவாக இருந்தாலும், அங்கே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறாதவர், திலீப். அதனால் இவரது படத்தைப் பார்ப்பவர்கள், நிச்சயம் உற்சாக மனநிலையில்தான் வீடு திரும்புவார்கள்.
ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் அவர் நடிப்பில் வெளியான 12 படங்களில் 10 படங்கள் தோல்வியைத் தழுவி இருக்கின்றன. அதற்கு அவர் மீது நீதிமன்றத்தில் இருந்த நடிகை கடத்தல் தொடர்பான வழக்கும் முக்கிய காரணம் என்கிறார்கள். இந்த வழக்கிற்குப் பிறகு, அவர் மீது எதிர்மறையான விமர்சனங்கள் பல எழுந்தன. இதனால் அவர் நடிப்பில் வெளியான படங்களும் பெரிய பாதிப்பை சந்தித்தன. சமீபத்தில் திலீப், அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். இதனால் அவரும், அவரது ரசிகர்களும் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் திலீப் நடிப்பில், ‘ப ப ப’ (bha bha ba) என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. ‘பயம் பக்தி பகுமானம்’ என்பதின் சுருக்கமாக இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதிரடி, திரில்லர் வகையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், திலீப் படங்களில் வழக்கமாக இருக்கும் நகைச்சுவைக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்திய போலீசால் தேடப்படும் குற்றவாளியாக திலீப் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் அதிரடியும், நகைச்சுவையும் கலந்ததாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
மேலும் நீதிமன்ற வழக்கிற்கு பிறகு வெளியான அவரது படங்களில் இல்லாமல் போன திலீப்பின் துள்ளல் நடிப்பு, ‘ப ப ப’ படத்தில் மீண்டும் வெளிப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்த்த அனைவருக்கும் அது நிதர்சனமான உண்மை என்பது தெரியவந்திருக்கும். அப்படி ஒரு துள்ளல் மற்றும் உற்சாக மனநிலை நடிப்பை, டிரெய்லரில் திலீப்பிடம் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இந்தப் படம் திலீப்புக்கு மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கும் என்று அவரது ரசிகர்களும், மலையாள திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூறி வருகிறார்கள்.
இந்தப் படத்தை தனஞ்செய் சங்கர் என்ற புதுமுகம் இயக்கி இருக்கிறார். படத்திற்கான கதையை பஹிம் ஷாபர், நூரின் ஷெரீப் ஆகியோர் எழுதி இருக்கின்றனர். இந்தப் படத்தில் கதாநாயகி இல்லை என்று கூறப்படுகிறது. படம் முழுவதும் பரபரப்பும், நகைச்சுவையுமாக கடந்து செல்லும் என்பதை டிரெய்லரே சொல்லிவிட்டது.
திலீப் முதன்மை கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், வினீத் சீனிவாசன், தயன் சீனிவாசன் போன்ற இளம் ஹீரோக்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். தவிர தமிழ் சினிமாவைச் சேர்ந்த நடன இயக்குனர் சாண்டி, சரண்யா பொன்வண்ணன், நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லியும் இருக்கிறார்கள். அதோடு மலையாளத்தைச் சேர்ந்த பாலு வர்கீஸ், பைஜூ சந்தோஷ், சித்தார்த் பரதன், அசோகன், தேவன், சலிம்குமார் உள்பட ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் இருக்கிறது.
கடந்த 8 ஆண்டுகளாக எதிர்மறை விமர்சனங்களால் மன உளைச்சலில் இருந்த திலீப்பிற்கு, ‘ப ப ப’ திரைப்படம், நேர்மறையான விமர்சனத்தையும், தன்னை மலையாள சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக நிலை நிறுத்திக்கொள்ளும்படியான வெற்றியையும் வழங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.