திலீப் விடுதலை: பாலியல் வழக்கில் தீர்ப்பு ஆச்சரியப்படுத்தவில்லை - பாதிக்கப்பட்ட நடிகை

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நடிகை தன் வழக்கின் தீர்ப்பு குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.;

Update:2025-12-14 20:54 IST

எர்ணாகுளம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த கும்பல் கேரவனை தடுத்து நிறுத்தி, அதன் உள்ளே அத்துமீறி நுழைந்தது. அங்கு இருந்த நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது. இதுகுறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் மாநில குற்றப்புலன் விசாரணை பிரிவு போலீசார் விசாரித்து பல்சர் சுனில் என்கிற சுனில் குமார் என்பவர் உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் மலையாள பிரபல நடிகர் திலீப்புக்கும், நடிகைக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, திலீப் சதி திட்டம் தீட்டி நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்பட்டது. அதை தொடர்ந்து நடிகர் திலீப், பல்சர் சுனில் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த எர்ணாகுளம் நீதிமன்றம் நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி விடுதலை செய்துள்ளது. மேலும் அவரது நண்பர் சரத் என்பவரை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் விடுவித்துள்ளது. மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், சுனில் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என்றும் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணையும், ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், தீர்ப்பு குறித்து பதிவொன்றை பாதிக்கப்பட்ட நடிகை வெளியிட்டுள்ளார். அதில், “8 ஆண்டுகள், 9 மாதங்கள், 23 நாள்கள் கழித்து இந்த நீண்ட வலிமிகுந்த பயணத்தில் நான் இறுதியாக சிறிய வெளிச்சத்தைக் காண்கிறேன். 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதில் நன்றி கொண்டிருக்கிறேன். என்னுடைய வேதனையைப் பொய்யென்றும் இந்த வழக்கைக் கற்பனைக் கதையென்றும் சொன்னவர்களுக்கு இந்த தருணத்தை சமர்பிக்கிறேன். இன்று நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

மேலும், குற்றவாளி எண் 1 என் தனிப்பட்ட ஓட்டுநர் என சிலர் கூறிக்கொண்டே இருக்கின்றனர். இது முற்றிலும் பொய். அவர் என் ஓட்டுநரும் அல்ல, என் ஊழியரும் அல்ல, எனக்கு அறிமுகமானவரும் அல்ல. 2016-ல் நான் பணியாற்றிய ஒரு திரைப்படத்திற்கு ஓட்டுநராக நியமிக்கப்பட்ட முன்பின் அறியாத நபர் அவர். அப்போது ஓரிரு முறை மட்டுமே அவரைப் பார்த்தேன். அதன் பின், அந்தக் குற்றம் நடந்த நாள்வரை மீண்டும் அவரை சந்தித்ததே இல்லை. தயவுசெய்து தவறான கதைகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்.

இந்த தீர்ப்பு பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், எனக்கு இல்லை. 2020-லிருந்தே ஏதோ சரியில்லை என்ற உணர்வு எனக்குள் உருவாகத் தொடங்கியது. குறிப்பாக, ஒரு குற்றவாளியைப் பொருத்தவரை, வழக்கு கையாளப்பட்ட விதத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அரசுத் தரப்பினரும் கவனித்தனர்.

இடைப்பட்ட இந்தக் காலங்களில், நான் உயர்நீதிமன்றத்தையும் உச்சநீதிமன்றத்தையும் நாடி இந்த நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கையில்லை என்பதைக் கூறினேன். இந்த வழக்கை அதே நீதிபதியிடமிருந்து மாற்ற வேண்டும் என்கிற ஒவ்வொரு கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன.பல ஆண்டுகளின் வலி, கண்ணீர், உணர்வுப் போராட்டத்தைக் கண்டு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். "இந்த நாட்டில் சட்டத்திற்கு முன் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்படுவதில்லை”.

இந்தப் பயணத்தில் என்னுடன் துணை நின்றவர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்கிறேன். பணத்தைப் பெற்றுக்கொண்டு, என்மேல் அவதூறுகளைப் பொழிந்து, கதைகட்டியவர்கள் மேலும் பணத்தை வாங்கிக்கொண்டு அதை தொடர்ந்து செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நடிகை தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநில அரசும், முதன்மை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்