‘அதர்ஸ்’ படத்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு; அட்டகாசமான 'கிரைம்-திரில்லர்' படம் என பாராட்டு
இப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் ரசிகர்களின் வரவேற்பு மிகுதியாகவே இருக்கிறது.;
சென்னை,
கிராண்ட் பிக்சர்ஸ் முரளி தயாரிப்பிலும், ஜி.கார்த்திக் இணைத் தயாரிப்பிலும் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம், 'அதர்ஸ்'. ஆதித்யா மாதவன் கதாநாயனாக அறிமுகமாகியுள்ளார். கவுரி கிஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். அஞ்சு குரியன், முனீஷ்காந்த், நண்டு ஜெகன், ராமதாஸ், சுந்த ரராஜன், மாலா பார்வதி உள்ளிட்டோர் நடித் துள்ளனர்.
உலகம் முழுவதும் நேற்று திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'அதர்ஸ்' படம் குறித்து இயக்குனர் அபின் ஹரிஹரன் கூறியதாவது:- சென்னையில் நடக்கும் ஒரு வேன் விபத்தில் சிலர் இறந்து போகிறார்கள். இதுகுறித்து விசாரிக்க வரும் ஆதித்யா மாதவன், அதன் பின்னணியில் ஆதரவற்றோர் இல்லங்களில் நடக்கும் முறைகேடுகளை கண்டறிகிறார். இன்னொருபுறம் செயற்கை கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளுக்கு சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதன் பின்னணியில் மருத்துவத்துறையில் மிகப்பெரிய முறைகேடுகள் நடப்பது தெரியவருகிறது. இதனை ஆதித்யா மாதவன் கண்டுபிடித்தாரா, குற்றவாளிகளை களையெடுத்தாரா? என்பதே பரபரப்பான மீதி கதை.
மிடுக்கான போலீஸ் அதிகாரியாக ஆதித்யா மாதவன் கம்பீரம் காட்டி அசத்துகிறார். அவருக்கு பொட்டியாக கவுரி கிஷனும் மிரட்டியுள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அஞ்சு குரியன் சண்டை காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார். முனீஷ்காந்த், நண்டு ஜெகன், ராமதாஸ், சுந்தரராஜன், மாலா பார்வதி என அனைவருமே சிறப்பு. அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் பரபரப்புக்கு துணை நின்றுள்ளது.
இப்படி ஒட்டுமொத்த நடிகர் நடிகைகளின் சிறப்பான நடிப்பு, தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக படம் இன்றைக்கு வெற்றிப்படமாக மாறியுள்ளது. திரையிட்ட இடங்களிலெல்லாம் ரசிகர்களின் வரவேற்பு மிகுதியாகவே இருக்கிறது. 'அட்டகாசமான கிரைம் திரில்லர் படம் என்று அனைவரும் பாராட்டுகிறார்கள். நல்ல கதை தோற்காது என்பது எங்கள் படத்திலும் நிரூபணம் ஆகியுள்ளது. இந்த மாபெரும் வெற்றியை பரிசளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், படம் பார்க்காத ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்த்து ஆதரவு தரவும் வேண்டுகிறோம் என்று இயக்குனர் அபின் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.