“வா வாத்தியார்” படத்தின் கிரெடிட்டை உண்மையான படைப்பாளிகளுக்குக் கொடுங்க - “ஏஸ்” பட இயக்குநர்
‘வா வாத்தியார்’ படம் ‘துக்ளக் தர்பார்’ போல இருக்கிறது என்று இயக்குநர் ஆறுமுகக்குமார் விமர்சனம் செய்திருக்கிறார்.;
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தியின் 26வது படமான ‘வா வாத்தியார்’ வெளியானது. இயக்குனர் நலன் குமாரசாமி, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் . பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’,‘ஏஸ்’ படங்களின் இயக்குநரான ஆறுமுகக்குமார் ‘வா வாத்தியார்’ படம் ‘துக்ளக் தர்பார்’ போல இருக்கிறது என்று விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் “‘வா வாத்தியார்’ படத்தில் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதற்கு முறையான கிரெடிட்டை அசல் படைப்பாளிகளுக்கு வழங்கி இருக்க வேண்டும். நாம் அனைவரும் நண்பர்களே என்றாலும், நேர்மை மிக முக்கியமான ஒன்று” என பதிவிட்டிருக்கிறார்.
‘துக்ளக் தர்பார்’ படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியிருந்தார். அந்நியன் ரக ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி கான்செப்ட்டை அரசியல் களத்தில் புகுத்தி, ஒருவனுக்குள்ளேயே இருக்கும் இரு வேறு கதாபாத்திரங்களை ஆடுபுலி ஆட்டம் ஆடும் விதமாக வடிவமைத்திருந்தார். இப்படத்தில் பார்த்திபன், விஜய் சேதுபதி , ராஷி கண்ணா ஆகியோர் நடித்திருந்தனர்.