‘விஜய் படம் சீக்கிரம் ரிலீசாக வேண்டும்’ - நமீதா விருப்பம்

‘ஜனநாயகன்’ படத்திற்காக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என நமீதா தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-17 18:12 IST

சென்னை,

நடிகர் ஜீவா நடிப்பில் மலையாள இயக்குநர் நிதேஷ் சஹாதேவ் இயக்கிய ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் கடந்த 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் சிறப்பு திரையிடல் காட்சியில் சென்னையில் நடிகை நமீதா கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-

“ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சினிமாவில் புதுப்புது டிரெண்ட் உருவாகும். ஒரு காலத்தில் காதல் திரைப்படங்களும், ஒரு காலத்தில் குடும்ப திரைப்படங்களும் அதிகமாக வந்து கொண்டிருந்தன. கடந்த சில வருடங்களாக கிரைம், திரில்லர் படங்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்திற்குப் பிறகு இனி காமெடி மற்றும் குடும்ப கதைகள் அதிகமாக வரும் என எதிர்பார்க்கிறேன்.

நான் மீண்டும் திரைப்படத்தில் நடிப்பதற்கு சரியான கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த காலத்தில் சில தேவையில்லாத படங்களில் நடித்து தவறு செய்துவிட்டேன். அதுபோன்ற தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் கதையை தேடிக் கொண்டிருக்கிறேன். பழைய நமீதா எதை செய்தாரோ, அதையே இந்த நமீதாவும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது முடியாது.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தை சுற்றி நிறைய பிரச்சினைகள் போய்க்கொண்டிருக்கின்றன. ஆனால் ரசிகர்கள் விஜய் படத்திற்காக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவரது படம் சீக்கிரம் ரிலீசாக வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்