எனக்கு எதிராக கூட்டு சதி நடந்து இருப்பதாக சந்தேகம் உள்ளது: நடிகர் திலீப் பேட்டி

விசாரணை அதிகாரிகள் தங்களது சுயலாபத்திற்காக, என்னை பலிகடா ஆக்கி விட்டார்கள் என நடிகர் திலீப் கூறியுள்ளார்.;

Update:2025-12-10 09:50 IST

கொச்சி,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த கும்பல் கேரவனை தடுத்து நிறுத்தி, அத்துமீறி நுழைந்து அங்கிருந்த நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு, ஆபாச புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டியது. இதுகுறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் அங்கமாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு மாநில குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் மலையாள பிரபல நடிகர் திலீப், பல்சர் சுனில் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நடிகர் திலீப் உள்பட 4 பேரை விடுதலை செய்து எர்ணாகுளம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதே சமயம் பல்சுர் சுனில் உள்பட 6 பேர் குற்றவாளிகள் என அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை விவரம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் நடிகர் திலீப் ஆலுவாவில் உள்ள வீட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

இந்த விவகாரத்தில் கேரள முதல்-மந்திரியை சிறப்பு புலனாய்வு குழு தவறாக வழிநடத்தி, அவருக்கு தவறான தகவல்களை அளித்துள்ளது. ஒருகட்டத்தில் 6 பேரை கைது செய்த பின்னர், இந்த வழக்கில் வேறு யாரும் கூட்டு சதியில் ஈடுபடவில்லை என்று அவரே கூறியிருந்தார். அதன் பின்னரும் முதல்-மந்திரியிடம் சில அதிகாரிகள் தவறான தகவல்களை தெரிவித்து, தவறாக வழிநடத்தி சென்றனர்.

விசாரணை அதிகாரிகள் தங்களது சுயலாபத்திற்காக, என்னை பலிகடா ஆக்கி விட்டார்கள். இந்த வழக்கின் தீர்ப்பு நகல் கிடைத்த பின்னர், இதுகுறித்து தொடர் நடவடிக்கை எடுக்க உள்ளேன். எனது குடும்பப்பாங்கான திரைப்படங்களை ரசிக்கும் ரசிகர்களை அகற்ற முயன்று சிலர் கூட்டு சதி செய்தனர். இந்த கூட்டு சதிக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறேன். சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு, சமூகத்தின் கவனத்தை எனக்கு எதிராக திருப்பி, என் மீதான மக்களின் அன்பையும், ஆதரவையும் சீர்குலைத்து, அதனை விரோதமாக மாற்றும் முயற்சியில் சதிகாரர்கள் வெற்றி கண்டார்கள். எனக்கு எதிராக கூட்டு சதி நடந்து இருப்பதாக சந்தேகம் உள்ளது. அதுகுறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்