"பச்சையா ஒரு பொய் சொல்லலாமுன்னா"…பார்த்திபன் வெளியிட்ட உருக்கமான பதிவு
நடிகர் பார்த்திபன் ஏவிஎம் சரவணன் உடனான நினைவுகளை உருக்கமாக பதிவிட்டுள்ளார்.;
சென்னை,
ஏ.வி.எம். நிறுவனத்தின் உரிமையாளரும், பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.வி.எம்.சரவணனின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.வி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஏவிஎம் சரவணன் உடனான நினைவுகளை உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தெரிவித்திருப்பதாவது,
பச்சையா ஒரு பொய் சொல்லலாமுன்னா…. இது புது வருடத்தில் வாங்கிய புது கார்! ஏவிஎம் சரவணன் சாரின் நினைவாஞ்சலிக்கு சென்று வந்ததில் என் மனம் சற்றே சாந்தியடைந்தது! வொயிட் அண்ட் வொயில் (White &white)-ம் அவர் நினைவாக…! இளையராஜா இல்லாத புதிய பாதை வெற்றிக்குப் பின், பொண்டாட்டித் தேவையில் ராஜா சாருடன் இணைந்தப் பின், ஏவிஎம் சரவணன் சார் படம் செய்யச் சொல்லி கை நிறைய அட்வான்ஸ் கொடுத்த போது வாங்கிச் சென்றவன் அடுத்த சந்திப்பில் அட்வான்ஸ்-ஐ திருப்பிக் கொடுத்தேன் காரணம் ராஜா சாருக்கும் ஏவிஎம்-க்கும் மனஸ்தாபம் இருந்ததால், “ராஜா இல்லாமல் செய்யுங்கள்” என்றார்.
“இப்போது தான் இணைந்துள்ளேன் இனி நிரந்தரமாக அவருடன் பணிபுரிய இது தடையாகும் “ என மறுத்தேன். அதற்கு சரவணன் சார்” அவர் இல்லாமல் தானே புதிய பாதை வெள்ளிவிழா கண்டது” என்றார் உடனே நான் “ அவர் இருந்திருந்தால் படம் தங்க விழா கண்டிருக்கும்” என புத்திசாலித்தனமாய் பேசி விட்டு வந்து விட்டேன். எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை அனுபவப்பூர்வமாக உணராத உளறல் வயதது ! உள்ளே வெளியே ‘சக்கரக்கட்டி ‘ பாடலின் போது ஐஸ்வர்யா கால்ஷீட் விஷயமாய் எனக்கும் ‘எஜமான்’ ஏவிஎம்-க்கும் ஏற்பட்ட பிரச்சனையில் எனக்கேற்பட்ட நஷ்டத்தை எடுத்துக் காட்டி ‘ஏவி மெய்யப்ப செட்டியாரின் ஆன்மா உங்களை மன்னிக்காது’ என்று கடுங்கோபமாய் கடிதம் கூட அனுப்பினேன். கொஞ்சங்கூட கோபப்படாமல் அதை ஈடுசெய்ய என்னை அழைத்து மேசை நிறைய பணத்தை விரித்து உருளும் ஏவிஎம் மெகா பந்தை விட தன் மனம் பெரிது என்பதைக் காட்டினார். உயர்ந்த அந்தஸ்த்தில் இருந்தவர் மனதார மன்னிப்பும் கோரினார் . என் மனம் கலங்கி விட்டது.
என் நியாயமான கோபத்தைக்கூட அவர் அலட்சியப் படுத்தியிருக்கலாம். மேசையை விட உயரத்தில் இருந்த அவர் நற்கரங்களைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டு வெளியேறினேன். என் மீது அவரின் மதிப்பு மிகுந்தது. மதிப்பு மிகுந்த சினிமாவின் சின்னம் ஏவிஎம். ரஜினி சார் சரவணன் சாரை அசையா சொத்து என்றார். ஆனால் நான் ஏவிஎம் என்ற அடையாளம் தான் அசையா சொத்து என நினைக்கிறேன். அவர்கள் தொடர்ந்து படமெடுக்க வேண்டுமென அருணா அவர்களிடம் அன்று கூட வலியுறுத்தினேன். சில மனிதர்கள் மறைந்தாலும் அவர்களின் உயர்ந்த குணம் நினைவுகளாக படித்துறை பாசி போல பச்சக் என நெஞ்சோரங்களில் ஒட்டிக் கொள்கின்றன பசுமையாக ….!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.