“திரௌபதி 2” படத்தில் சின்மயி பாடிய பாடல் இருக்காது - இயக்குநர் மோகன் ஜி

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள ‘திரௌபதி 2’ படம் வரும் 23ந் தேதி வெளியாகிறது.;

Update:2026-01-05 16:50 IST

சென்னை,

2016 ம் ஆண்டு வெளியான ‘பழைய வண்ணாரபேட்டை’ படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டு ‘திரௌபதி’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.

தற்போது அதன் 2-வது பாகத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார். இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ரக்சனா இந்துசூடன் 'திரௌபதி தேவி'யாக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இதில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றை சின்மயி பாடியுள்ளார். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சரித்திர காலப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் ஆரம்பித்து அரியலூரில் நிறைவடைந்ததுள்ளது.

இப்படத்தின் ‘எம்கோனே’ பாடலை சின்மயி பாடி இருந்தார். இப்படத்தில், பாடியதற்காக சிம்மயிக்கு எதிராக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து மோகன் ஜி படத்தில் பாடியதற்காக சின்மயி மன்னிப்புக்கேட்டிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், “எம்கோனே பாடல் பாடியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஜிப்ரானை 18 வருடங்களாக எனக்கு தெரியும். அவரது அலுவலகத்தில் இருந்து இந்த பாடலை பாட அழைத்தபோது, ​​வழக்கம் போல சென்று பாடினேன். அப்போது ஜிப்ரான் இல்லை. இப்போதுதான் எல்லாமே புரிய ஆரம்பிக்கிறது. முன்பே தெரிந்திருந்தால் ஒருபோதும் பாடியிருக்க மாட்டேன். எனக்கும் அந்த கொள்கைகளுக்கும் நிறைய முரண் உள்ளது. இதுதான் முழு உண்மை” என்றார்.

சின்மயி மன்னிப்பு கேட்ட நிலையில் மோகன் ஜி வெளியிட்ட பதிவில், “என்னுடன் திரௌபதி 2 படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அல்லது யாரையும் குறிவைத்து தாக்க வேண்டாம். என் படம் பேசுவது என் சொந்த சிந்தனை. என்னுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்து பணியாற்றும் எந்த நபரையும் குறிவைத்து தாக்குவது கோழைத்தனமாகும்” இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ‘திரௌபதி 2’ படத்தில் சின்மயி பாடிய பாடலிலிருந்து அவரது குரலை நீக்கி, வேறு ஒரு பாடகியைப் பாட வைக்க முடிவு செய்துள்ளதாக இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். இப்படம் வரும் 23ந் தேதி வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்