“சிக்கந்தர்” திரைக்கதையை மாற்றிய ஏ.ஆர்.முருகதாஸ் - ராஷ்மிகா மந்தனா
‘சிக்கந்தர்’ கதையை முருகதாஸ் சொன்ன போது சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் திரைப்படமாக உருவாகும் போது மாறியதாக ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.;
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ‘சிக்கந்தர்’ படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதனால் படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியை சந்தித்தது.
இதற்கிடையில் "சிக்கந்தர்" படத்தின் தோல்வி குறித்து பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில், “சிக்கந்தர் படப்பிடிப்பில் பல நெருக்கடிகள் இருந்தன. சல்மான் கானுக்கு மிரட்டல் இருந்ததால் அவரை வைத்து பகலில் படப்பிடிப்பு நடத்த முடியாது. இரவில் தான் படப்பிடிப்பு நடத்த முடியும். பகல் காட்சியாக இருந்தாலும், அதனை இரவில் தான் படமாக்க முடியும். எல்லாமே கம்யூட்டர் கிராபிக்ஸிலும், கிரீன் மேட்டிலும் எடுக்க வேண்டியதாக இருந்தது. அவர் படப்பிடிப்புக்கும் தாமதமாக தான் வருவார். என்ன செய்ய முடியும்?” என்று வேதனையுடன் தெரிவித்திருந்தார். இதனால் ஏ.ஆர்.முருகதாஸை சல்மான் கான் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். பின்பு சல்மான் கான், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு விளக்கமளித்து கிண்டல் செய்திருந்தார்.
இந்த நிலையில் ‘சிக்கந்தர்’ படம் குறித்து ராஷ்மிகா “சிக்கந்தர் கதை முதலில் முருகதாஸ் சொன்ன போது சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பில் அதற்கு மாறாக இருந்தது. பொதுவாக சில படங்களில் அப்படித்தான் நடக்கும். ஒரு கதையைக் கேட்கும்போது, அது ஒன்றாக இருக்கும். திரைப்படமாக உருவாகும் போது மாறும். அது சினிமாவில் சகஜம்தான். சிக்கந்தர் படத்திலும் அது நடந்தது” என்று கூறியுள்ளார்.